அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்!

Gargi Review: கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் நடித்திருக்கும் கார்கி படம் நாளை ஜுலை 15ம் தேதி வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2022, 10:29 AM IST
  • சாய்பல்லவி நடித்த கார்கி படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
  • காளிவெங்கட், ஆர் எஸ் சிவாஜி, சரவணன்,ஜெயபிரகாஷ் போன்றோர் நடித்துள்ளனர்.
  • குழந்தை பாலியல் துன்புறுத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.
அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்! title=

Gargi Movie Review: ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதில் இருந்து ஒரு கதையின் நாயகியாக பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சாய்பல்லவி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கார்கி.  ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார்.  இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. பின்பு சட்ட போராட்டங்களின் மூலம் சாய் பல்லவி தனது அப்பாவை காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் ஒன்லைன்.  இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.  சக்தி பிலிம் பேக்டரி தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

gargi

மேலும் படிக்க | பார்த்திபனின் இரவின் நிழல் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சாய் பல்லவி கார்கி படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக அதே சமயம் அழகாகவும் காட்சியளிக்கிறார். படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பு நம்மை வேறு எதையும் யோசிக்க விடாமல் கதையினுள் இழுத்து விடுகிறது.  எமோஷனல் காட்சிகளில் சாய்பல்லவி நடிப்பை பார்த்து நாமும் எமோஷனல் ஆகும் அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  தனது அப்பாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு மகளாக பல இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார் சாய்பல்லவி.  வழக்கறிஞராக வரும் காளி வெங்கட்க்கு இதைவிட ஒரு சிறப்பான படம் மீண்டும் அமையுமா என்பது சந்தேகம்தான். பல இடங்களில் தனது ஒன்லைன் மூலம் ரசிக்க வைக்கிறார். மேலும் இவரது கதாபாத்திரம் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.

gargi

சோகமாக நகரும் காட்சிகளில் கூட தனது முக பாவனைகள் மற்றும் கவுண்டர்களின் மூலம் சிரிக்க, ரசிக்க வைக்கிறார்.  சொல்லப்போனால் படத்தின் மற்றொரு ஹீரோவும் இவர்தான். மேலும் சாய் பல்லவியின் அப்பாவாக வரும் ஆர் எஸ் சிவாஜி, நடிகர் சரவணன்,ஜெயபிரகாஷ் போன்றோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். கேமியோ ரோலில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு கொடுத்த வேலையை கட்சிதமாக செய்கிறார்.  நீதிக்காக போராடும் ஒரு சாதாரண ஆசிரியரின் கதையை தத்ரூபமாக எந்தவித சினிமா தனமும் இல்லாமல் நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் கௌதம் ராஜேந்திரன்.  படத்தில் சாய்பல்லவியின் அப்பாவிற்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று நாம் பதட்டப்படும் அளவிற்கு திரைக்கதை சூப்பராக இருந்தது.  அரசாங்க எந்திரம் எந்த அளவிற்கு மோசமாக செயல்படுகிறது என்பதை பட்டும் படாமல் கதையில் போற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார் இயக்குனர்.  படத்தின் ஆரம்பத்தில் போடப்பட்ட டைட்டில் கார்டிலிருந்து எண்ட் காடு வரை பல புதுமையான விஷயங்களை புகுத்தியுள்ளார் கவுதம்.  முக்கியமாக கோர்ட் ரூமில் நடக்கும் சீன்கள் அனைத்தும் பிரமாதம். திருநங்கைகள் நீதிபதியாக வந்தாலும் அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை சொல்லி இருக்கிறது கார்கி படம்.

gargi

ஒருவர் தவறுதலாக ஒரு பெரிய வழக்கில் கைதாகும் பொழுது அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் என்ன விதமான இன்னல்கள் சந்திக்க வேண்டும் என்பதை இப்படம் நமக்கு உணர்த்துகிறது. மேலும் இன்றைய மீடியாவும் அவர்களை எவ்வாறு சித்தரிக்கிறது, மீடியா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷ்டங்களும் சொல்லப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் குறை சொல்லும் அளவிற்கு இல்லாமல் உள்ளது. ஆங்காங்கே 96 படத்தின் பின்னணி இசை மனதிற்கு வந்து சென்றாலும் கேட்க இனிமையாக உள்ளது.  படத்தில் உள்ள கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்ததே இப்படத்தின் மிகப்பெரிய பலம். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற வசனத்திற்கு ஏற்ப இப்படம் அமைந்துள்ளது.  இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி ஆழமாக பேசியுள்ளது கார்கி.  'என் பொண்ணு இப்படி இருப்பதற்கு செத்திருக்கலாம்' என்று சரவணன் சொல்லும் வசனம் அனைவரையும் புல்லரிக்க செய்கிறது.  ஆங்காங்கே படம் சிறிது மெதுவாக நகர்ந்தாலும் இப்படம் சொல்லும் செய்தி மற்றும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்க்காக கண்டிப்பாக இந்த கார்கியை பார்க்கலாம்.

மேலும் படிக்க | Tamil Movies - இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 5 படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News