இந்த இயக்குனர் கொஞ்சம் டார்ச்சர் தான்! மேடையில் போட்டுடைத்த விஜய் சேதுபதி!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.   

Written by - RK Spark | Last Updated : Jan 20, 2024, 07:47 AM IST
  • 25ம் தேதி வெளியாகும் சிங்கப்பூர் சலூன்.
  • ஆர்.ஜே. பாலாஜி, மீனாட்சி செளத்ரி நடித்துள்ளனர்.
  • இயக்குனர் கோகுல் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இந்த இயக்குனர் கொஞ்சம் டார்ச்சர் தான்! மேடையில் போட்டுடைத்த விஜய் சேதுபதி! title=

சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “சரியான மனிதரிடத்தில் இருந்தால் நமக்கும் சரியான விஷயங்கள் நடக்கும். அப்படி எம்.ஜி.ஆரிடம் இருந்த நல்ல குணங்கள் ஐசரி வேலனுக்கும் அவருடைய மகன் ஐசரி கணேஷூக்கும் வந்திருக்கிறது. வாழ்த்துகள். 45 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் சலூனுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஹேர்ஸ்டைல் என்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தபோது ஒரு ஹேர்ஸ்டைலிலும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது வேறொரு லுக்கிலும் இருந்தார். அதுபோலதான் ரஜினிகாந்த், விஜயகாந்தும். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான, ஹேர்ஸ்டைலை வைத்து படம் எடுப்பது நல்ல விஷயம். சினிமாவில் ஹீரோவுக்கு வெற்றிகள் வர வர அடுத்தடுத்தப் படங்களில் பட்ஜெட்டை ஏற்றினால் மட்டுமே வேறொரு தளத்திற்குப் போக முடியும். ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ரன் பேபி ரன்’ இப்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என பாலாஜியின் படங்களின் பட்ஜெட் அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டேப் போகிறது. 

குறிப்பாக, இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அவ்வளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறது. சிறப்பான சிஜி பணிகளுக்கு தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு ஒரு மைண்ட்செட் இருக்கும். அதைத்தாண்டி அவர் செலவழிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இதற்கு முன்பு கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவர்களுடன் சேர்ந்துதான் காமெடி செய்திருக்கிறேன். ஆனால், நானே ஒத்தைக்கு ஒத்தையாக நின்று காமெடி செய்தது இந்தப் படத்தில்தான். திருவிளையாடல் நாகேஷ் போல, ‘தனியா நடிக்க வச்சுட்டானே’ என்றுதான் நடித்தேன். இயக்குநர் கோகுலின் அந்த தைரியத்திற்கு நன்றி” என்றார்.

மேலும் படிக்க | VJ Archana: மாயா-பூர்ணிமாவுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா! வைரல் வீடியோ..

இயக்குநர் கோகுல், “ஒரு படத்தின் கண்டெண்ட் வலுவாக இருக்கும்போது, அதை நம்பி தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்தான் அங்கு ஹீரோ. அப்படி எனக்குக் கிடைத்த சூப்பர் ஹீரோதான் ஐசரி கணேஷ் சார். அவருக்கு நன்றி. அந்த சூப்பர் ஹீரோவை எனக்கு அறிமுகம் செய்தவர் என்னுடைய ஹீரோ ஆர்.ஜே. பாலாஜி. காட்சி சிறப்பாக வரவேண்டும் என்று அவரை நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். அதை எல்லாம் சகித்துக் கொண்டு சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறார். பார்பர்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும். சத்யராஜ் சார் சீனியர் நடிகர். அவர் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பாரா என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை எல்லாம் உடைத்து அவர் குழந்தைப் போல ஒத்துழைப்புக் கொடுத்தார். இவருடன் வேலைப் பார்த்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம்” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி, “படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குநர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்” என்றார்.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “ எனக்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி செளத்ரி புரோமோஷனுக்கு நேரம் தர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். ஆமாம், இப்போது அவர் விஜய் சாருக்கு ஜோடி. இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். சில காரணங்களால் அவராலும் வர முடியவில்லை. நட்புக்காக நடித்துக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா சாருக்கு நன்றி. இவர்கள் தவிர இன்னொரு பெரிய நடிகர் முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார். அதை இப்போது நாங்கள் சொல்லவில்லை. ஒரு ரூபாய் கூட தராமல் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. படத்திற்கு சிறப்பாக உழைத்துக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. இயக்குநர் கோகுல் கூட வேலைப் பார்ப்பது சிரமம் என விஜய்சேதுபதி சொன்னார். நாங்கள் அடித்துக் கொண்டோம் என சில செய்திகள் எல்லாம் பார்த்தேன். அப்படி எல்லாம் இல்லை. கோகுலுடன் வேலைப் பார்ப்பது கஷ்டம்தான். ஏனெனில், அவருடைய கதாபாத்திரத்திற்கு நான் எதிராக இருந்தேன். ஆரம்பத்தில் நிறைய விவாதித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான் அவருடைய கதைக்கு செட் ஆனேன். இந்தப் பயணம் கடினமாகதான் இருந்தது. ஆனால், ஆர்வத்துடனும் மறக்க முடியாத ஒன்றாகவும் இருந்தது. 

அடுத்தப் படத்தில் நான் சிறப்பாக நடிக்க இவருடன் வேலைப் பார்த்ததும் முக்கியக் காரணம். இந்தக் கதை மீது நான் வைத்த நம்பிக்கையை ஐசரி கணேஷ் சாரும் வைத்திருந்தார். படத்தில் சலூன் செட் போடவே ஒன்றரை கோடி ஆனது. இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்த ஐசரி சாருக்கு நன்றி. ரெட் ஜெயண்ட்ஸ் நல்ல படங்களை மட்டுமேதான் வாங்கும். அப்படித்தான் இந்தக் கதையும் பிடித்துப் போய் வாங்கினார்கள். இந்த வேலை இவர்கள் மட்டும்தான் செய்வார்கள் என்ற ஜாதி மனப்பான்மையை உடைத்து உலகம் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. எந்த வேலையை யார் பிடித்து செய்தாலும் முன்னேறிக் கொண்டே போகலாம் என்பதுதான் இதன் அடிநாதம். நிறைய பேருக்கு கனெக்ட் ஆகும் என ஆசையாக செய்த படம் இது. பிடிச்ச விஷயம் செய்யும் முன்பு நன்றாகப் படித்து விடுங்கள். அது ரொம்ப முக்கியம். படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News