அதிகாரத்தில் இருப்பதால் இவ்வளவு அலட்சியமா உதயநிதி?...

ஒருவரின் படம் குறித்தும், படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் குறித்தும் பொதுவெளியில் கிண்டல் தொனியில் பேசுவதற்கு முன் நடிகனாகவும், தனது ஆரம்பகால படங்கள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 18, 2022, 05:39 PM IST
  • உதயநிதியின் சமீபத்திய பேட்டிகள் பலரால் ரசிக்கப்படவில்லை\
  • சைக்கோ குறித்து பேசியிருந்தது விவாதத்தை கிளப்பியிருக்கிறது
  • அவரை நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்துவருகின்றனர்
 அதிகாரத்தில் இருப்பதால் இவ்வளவு அலட்சியமா உதயநிதி?...  title=

ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்துவந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் சொல்லிக்கொள்ளும்படி சென்றாலும் அதில் ஹீரோ உதயநிதியா இல்லை சந்தானமா என்ற கேள்வி இன்றளவும் இருக்கிறது. அதன் பிறகு அவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் தொடர்ந்து கமர்ஷியல் பாதைகளில் சென்ற உதயநிதி அந்தப் பாதை ஒர்க் அவுட் ஆகாததால் கதையம்சம் உள்ள படங்களில் தனது கவனத்தை செலுத்தினார். அதன்படி அஹமத் இயக்கத்தில் மனிதன், சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே, ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர், மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு மேம்பட்டிருந்தது. அல்லது அந்தப் படத்தின் இயக்குநர்களால் மேம்படுத்தப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க தேர்தலில் களமிறங்கி எம்.எல்.ஏவாக பதவியேற்ற பிறகும் தொடர்ந்து நடித்துவருகின்றார் உதயநிதி. இதனால் அவரது கலை ஆர்வத்தை கண்டு அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சிலாகித்தனர். இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது சைக்கோ படம் குறித்து பேசிய அவர், “சைக்கோவில் நிறைய ஷாட்ஸ் நான் கிடையாது. எல்லாமே டூப்தான். ஏனென்றால் நான் ஷூட்டிங்கிற்கே போகவில்லை. ரொம்ப கம்மியாதான் போனேன். அந்தப் பட ஷூட்டிங்கின்போது பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தது.பிரசாரம் முடித்து போனேன். ஆனால் 4,5 நாள்கள் நான் இல்லாமலேயே எடுத்து முடித்துவிட்டார். என்னை மாதிரியே ஒரு பையனை பிடித்துக்கொடுத்தேன்.

Udhayanidhi, Santhanam

என்ன எடுக்கப்போறீங்க காலுக்கு எடுக்கப்போறீங்க. சில் அவுட் எடுக்கப்போறீங்க. நான் இல்லாமலேயே மேனேஜ் செஞ்சுக்கோங்க போங்க நான் கிளம்புறேன். நடிச்சவரைக்கும் போதும் என்றேன். உடனே அவர் (மிஷ்கின்), ‘யப்பா க்ளைமேக்ஸ்ல நீ வரணுமே’ என்றார். க்ளைமேக்ஸ்லாம் வேணாம் இதுலயே முடிங்க படத்த என்றேன். பார்த்தீங்கனா க்ளைமேக்ஸ்ல நான் இருக்கமாட்டேன். திடீர்னு காணாமல் போயிடுவேன்” என பேசியிருந்தார்.

தற்போது உதயநிதியின் இந்தப் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஒருவருக்கு நிச்சயம் அரசியல்தான் பிரதானமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேசமயம் ஒரு நடிகராக கலைக்கும், கலைஞனுக்கும் அவர் மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர்.

உதயநிதியின் ஹியூமர் சென்ஸ் பேச்சுக்கள் எப்போதும் ரசிக்கும்படி இருப்பவைதான். ஆனால் சமீபகாலமாக அவரது பேச்சுக்கள் எல்லை மீறி செல்வதாகவே கருதப்படுகிறது.  ஏனெனில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்திற்கு வந்த சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக மட்டுமே பார்க்க முடிந்த உதயநிதி மீது சைக்கோ படத்தில்தான் ஓரளவு நடிக்க தெரிந்தவர் என்ற முத்திரை விழுந்தது. அப்படி பெயர் வாங்கிக்கொடுத்த சைக்கோ படத்தை உதயநிதி அலட்சியமாக அணுகியதையும், அதன் இயக்குநர் மிஷ்கினை இவ்வளவு அலட்சியமாக பேசியிருப்பதையும் பெரும்பாலானோர் ரசிக்கவில்லை என்பதே நிதர்சனம். 

Mysskin

அதேபோல் மற்றொரு பேட்டியில் டான் படத்தை எங்கள் வீட்டில் 7,8 நண்பர்களோடு பார்த்தேன். யாருக்குமே சிரிப்பு வரவில்லை ஏன் இது என்று பேசியிருந்தார். அவர் கூறியது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் டான் 100 கோடி ரூபாய் வசூலித்த படம். அந்தப் படம் ரசிகர்களிடம் கனெக்ட் ஆகவில்லை என்றால் எப்படி 100 கோடி வசூலித்திருக்கும். ஒருவேளை உதயநிதிக்கு சினிமாக்களையோ, ரசிகர்களின் மனநிலையையோ கணிக்க தெரியவில்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

முக்கியமாக வளரும் நடிகரோ, வளர்ந்த நடிகரோ இப்படி ஒரு இயக்குநர் குறித்தும், சக நடிகர் குறித்தும் அலட்சியமாக பேசிவிட முடியுமா. அது எப்போதும் முடியாது. ஏனெனில் அவர்களுக்கு உதயநிதிக்கு இருப்பது போல் அதிகார நாற்காலி இல்லை. தற்போது அதிகாரத்தில் இருப்பதாலும், பல படங்களை விநியோகம் செய்வதாலும் உதயநிதி இப்படி பேசுவதற்கு எதிராக யாருமே ஒரு சிறு எதிர்வினையைக்கூட ஆற்றமுடியாமல் நெருக்கடியில் இருக்கிறார்களோ என்றும் நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.

SK, Udhayanidhi

சினிமா பலருக்கு கனவு தொழில். பலர் வாய்ப்பு கிடைக்காமல் இன்னமும் அதற்குள் சென்றுவிட ஏங்கி துடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி ஏங்கி,  உழைத்து மேலே வந்தவர்கள்தான் மிஷ்கினும், சிவகார்த்திகேயனும். குறிப்பாக, உதயநிதிக்கு பின் நடிக்க வந்த சிவகார்த்திகேயன் உதயநிதியைவிட நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி பல படிகள் முன்னேறி சென்றுவிட்டார். அப்படி இருக்கும் ஒருவரின் படம் குறித்தும், படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் குறித்தும் பொதுவெளியில் கிண்டல் தொனியில் பேசுவதற்கு முன் நடிகனாகவும், தனது ஆரம்பகால படங்கள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மேலும் படிக்க | இந்தி திர்ஷ்யம் 2 படக்குழுவிற்கு அதிர்ச்சி... தமிழ்ராக்கர்ஸ் இறக்கிய Full HD பிரிண்ட் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News