இந்தி நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்துதெரிவித்ததால் பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்தி நடிகர் ராக்கி சாவந்த் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். சர்ச்சைக்கு பெயர்போன இவர் தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.
இவர் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். விழாவிற்கு அவர் கவர்ச்சி உடை அணிந்து சென்றார்.
அந்த ஆடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. அந்த ஆடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து வழக்குபதிவுசெய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை எழுதிய முனிவர் வால்மீகி எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறியதாக புகார் எழுந்தது. தற்போது இது தொடர்பாக பஞ்சாப் லுதியானா நீதிமன்றம் மார்ச் 9-ம் தேதி வாரண்ட் பிறபித்து இருந்தது இதை தொடர்ந்து பஞ்சாப் போலீசார் இன்று மும்பை வந்தனர். அவர்கள் ராக்கி சாவந்தை இன்று கைது செய்தனர்.