தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 22-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான மாஸ்டர் ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தயாரிப்பாளர்களால் படத்தை திட்டமிடப்பட்ட தேதியில் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று இந்த திரைப்படத்தினை வெளியிட தற்போது படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. எனினும் இந்த தகவல்கள் வதந்திகளாகவே சுற்று வருகின்றன.
முழு அடைப்பால் மூடப்பட்ட திரையரங்கங்கள் மற்றும் மால்கள் ஜூன் மாதம் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஜூன் மாதத்தில் விஷயங்கள் சிறப்பாக வரும் என்றும் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். மேலும், இது ஜூன் 22 அன்று நடிகரின் பிறந்த நாள் என்பதால், அவர்கள் அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை எனவும் தெரிகிறது.
முன்னதாக, ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும் முயற்சியில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்தார். இந்த போஸ்டரில் ரசிகர்கள் புதிய வெளியீட்டு தேதி குறித்த தகவல்களை விரைவில் பெறுவார்கள் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
சேவியர் பிரிட்டோ தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான XB பிலிம் கிரியேட்டர்ஸின் கீழ் தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார். மாலவிகா மோகனன், ஆண்ட்ரியா எரேமியா, அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோரும் இந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.
இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிகர் விஜய் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச் 15 அன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர், "எனது ரசிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாதது குறித்து நான் வருத்தப்படுகிறேன். இதை நாங்கள் ஒரு தனியார் நிகழ்வாக செய்தோம். ரசிகர்களுக்கு நன்றி." என தெரிவித்தார். மற்றும் இந்த நிகழ்ச்சியின் போது படத்தின் இயக்குனரைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.