Inga Naan Thaan Kingu Review: சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இங்க நான் தான் கிங்கு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆனந்த் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஸ் காந்த், சுவாமிநாதன், மாறன், மறைந்த நடிகர் சேசு ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் ஜிஎன் அன்புச் செழியன் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க, ஓம் நாராயணன் ஒளிப்பதிவும், தியாகராஜன் எடிட்டிங் மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் படிக்க | Vimal: அச்சு அசல் விமலை போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! குடும்ப புகைப்படம்..
சொந்த பந்தம் என யாருமே இல்லாத சந்தானம் திருமணத்திற்காக பெண் தேடி வருகிறார். மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருந்தால் தான் பெண் கிடைக்கும் என 25 லட்சம் கடன் வாங்கி சொந்தமாக ஒரு பிளாட் வாங்குகிறார். இதனால் தனக்கு மனைவியாக வரும் பெண் 25 லட்சம் பணம் கொண்டு வர வேண்டும் என்று பெண் வீட்டார்களிடம் கோரிக்கை வைக்கிறார். இந்நிலையில் ஒரு ஜமீன் குடும்பம் சந்தானத்திற்கு பெண் தர சம்மதிக்கிறது, உடனடியாக இவர்களுக்கு திருமணமும் நடைபெறுகிறது. ஆனால் அதன் பின்பு தான் அந்த ஜமீன் குடும்பமும் கடன் தொல்லையால் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பது சந்தானத்திற்கு தெரிய வருகிறது. மறுபுறம் சென்னையில் வெடிகுண்டு வைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர், இந்த இரண்டு கதையும் ஒரு இடத்தில் சேருகிறது அதன் பின்பு என்ன ஆனது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கும் படம் தான் இங்க நான் தான் கிங்கு.
சந்தானம் வழக்கம் போல தனது காமெடி பஞ்ச் டயலாக்குகளில் அசத்தியுள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி, தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் இருந்தது போலவே இந்த படத்திலும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்துள்ளது. காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட்டும் ஆகியுள்ளது. குறிப்பாக ஜமீனாக வரும் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் பால சரவணன் மற்றும் சந்தானம் ஆகியோர்களுக்கு இடையே நடக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பை வரவைக்கிறது. படம் முழுக்க இவர்களது ரகளை ரசிக்க வைக்கிறது. கதாநாயகி ப்ரியாலயா தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்துள்ளார், இந்த படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவேக் பிரசன்னாவிற்கு இந்த படத்தில் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது, அதை அவர் சிறப்பாகவே கையாண்டு உள்ளார். இவர்களைத் தாண்டி முனீஸ் காந்த், சுவாமிநாதன், மாறன் மற்றும் சேசு ஆகியோரின் காமெடியும் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. ஆரம்பத்தில் பெண் பார்க்கும் போது வரும் காட்சிகள், லிப்டில் நடக்கும் காட்சிகள், மருத்துவமனையில் நடக்கும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் என அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகள் மூலம் நம்மை படத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக விக்ரம் படத்தின் கிளைமாக்ஸை மனோபாலாவை வைத்து ஸ்பூப் செய்திருந்தனர். அதற்கு திரையரங்கமே அதிரும் அளவிற்கு கைத்தட்டல்களும் விசிலும் வந்தது.
டி இமானின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார். ஓம் நாராயணனின் ஒளிப்பதிவும், தியாகராஜனின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு படத்தைப் பார்த்தால் இரண்டு மணி நேரத்திற்கு வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம், அந்த அளவிற்கு நிறைய புதுமையான விஷயங்களை யோசித்து வைத்துள்ளனர். இங்க நான் தான் கிங்கு படத்தின் மூலம் மீண்டும் தான் காமெடியில் கிங் என்பதை நிரூபித்துள்ளார் சந்தானம்.
மேலும் படிக்க | ஹிப் ஹாப் ஆதியின் 25வது படம் P T சார்! எப்படியிருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ