Watch: காயப்பட்ட யானையை தீ வைத்து துரத்திய கொடூரம், நெஞ்சை பதறவைக்கும் video

யானையின் முதுகில் ஒரு ஆழமான துளையும் காயமும் இருப்பதை வனக் குழு கவனித்தது. அதன்பிறகு பழங்களுக்குள் வைத்து யானைக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2021, 08:58 AM IST
  • தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பக பகுதியிலிருந்து வந்துள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ.
  • யானை மீது தீ வைத்து அதை காயப்படுத்தும் சிலரது வீடியோ வெளியானது.
  • சில நாட்களுக்கு முன்னர் யானை இறந்தது.
Watch: காயப்பட்ட யானையை தீ வைத்து துரத்திய கொடூரம், நெஞ்சை பதறவைக்கும் video  title=

சென்னை: தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தின் இடையக மண்டலத்திலிருந்து மனிதாபிமானமற்ற தன்மையையும் மிருகத்தனத்தையும் காட்டும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. மாவனல்லாவில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டில் சில நபர்கள், தங்களது இடத்தில் அலைந்து திரிந்த, ஏற்கனவே காயப்பட்டிருந்த ஒரு யானையின் மீது, நெருப்பூட்டப்பட்ட துணியை வீசுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ என்று கூறப்படுகிறது.

வீடியோவின் முதல் பகுதியில், எரியும் கட்டையை வைத்திருக்கும் ஒரு நபர் யானையைத் துரத்துவதைக் காண முடிகிறது. அதன் பின்னர் சிலர் பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பீதியடைந்த யானை அச்சத்தில் ஓடுகிறது.

இந்த வார தொடக்கத்தில், ஜனவரி 19 அன்று இறந்த யானை இதே யானைதான் (Elephant) என்று வன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “இந்த மரணம் சில மாதங்கள் முன்னர் ஏற்பட்டுள்ள ஒரு காயத்தால் ஏற்பட்டது. நாங்கள் இந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் இந்த தீ சம்பவம் அதற்கு பிறகு நடந்தது” என்று முதுமலை புலி ரிசர்வ் கள இயக்குநர் கே.கே.கௌஷல் ஜீ மீடியாவிடம் கூறினார்.

விசாரணையின் அடிப்படையில் தாங்கள் பிரசாத் மற்றும் ரேமண்ட் டீன் ஆகிய இரு நபர்களை கைது செய்துள்ளதாகவும், ரிக்கி ரேயான் என்ற மற்றொருவர் இப்போது அப்பகுதியில் இல்லை என்றும், அவரை தேடி வருவதாகவும் முதுமலை (Mudumalai) புலி காப்பக பகுதியின் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஏழை மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் BJP அரசு: MKS

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ரொனால்டோ” அல்லது “எஸ்ஐ” என்ற புனைப்பெயர் வைக்கப்பட்ட அந்த காட்டு யானை எப்போதும் மசினகுடி-பொக்காபுரம் பகுதியில் காணப்பட்டதாக தெரிவித்தனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்புதான், யானையின் முதுகில் ஏற்பட்ட காயம் குறித்து அறிந்துகொண்ட அதிகாரிகள் யானையின் நடமாட்டங்களைக் கவனிக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து அந்த யானைக்கு உணவளித்து கவனித்துக்கொள்ள ஒரு குழு நியமிக்கப்பட்டது.

"எங்கள் குழு அதன் முதுகில் ஒரு ஆழமான துளை (காயம்) இருப்பதைக் கவனித்தது. அதன்பிறகு பழங்களுக்குள் வைத்து அதற்கு மருந்துகளை கொடுக்க ஆரம்பித்தோம். ஒருமுறை நாங்கள் யானையை அமைதிப்படுத்தி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்டு சிகிச்சையளித்தோம். யானையின் நிலையில் படிப்படியாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அது தொடர்ந்து மக்களின் குடியிருப்புகளுக்கு செல்வதையும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களைத் தடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது” என்று ஸ்ரீகாந்த் முன்பு ஜீ மீடியாவிடம் தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு யானை மிகவும் பலவீனமாக இருப்பதை அவர்களது குழு கண்டுபிடித்ததாக அவர் கூறினார். அதன் பிறகு அவர்கள் அதை அமைதிப்படுத்தவும், மேலும் சிகிச்சைக்காக யானை முகாமுக்கு அழைத்துச் செல்லவும் முடிவு செய்தனர். செவ்வாயன்று யானை ஒரு லாரி மீது ஏற்றப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டபோதுதான் அது சரிந்து விழுந்து இறந்தது.

“முதுகில் ஏற்பட்ட ஆழமான காயம் நுரையீரலில் சீழ் உருவாவதற்கு காரணமாக இருந்தது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. காயம் கூர்மையான மூங்கில் விளிம்புகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

ALSO READ: COVID-19 Museum: கொல்கத்தாவில் கூடிய விரைவில் வருகிறது கொரோனா அருங்காட்சியகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News