2041இல் தான் குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வருமா? அதிர்ச்சி தகவல்... ஐ.நா கவலை...

குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுக்குமாறு ஐ.நா அறிவுறுத்துகிறது. கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கூடும் என்ற கவலையும் எழுகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 8, 2020, 03:41 PM IST
  • 1970களில், பங்களாதேஷில் குழந்தை திருமண விகிதம் 90% ஆக இருந்தது, அதன் பின்னர் அது 51 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
  • தெற்காசியாவில் சிறார்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விகிதம் அதிகம்.
  • திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21...
2041இல் தான் குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வருமா? அதிர்ச்சி தகவல்... ஐ.நா கவலை...

குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுக்குமாறு ஐ.நா அறிவுறுத்துகிறது. கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கூடும் என்ற கவலையும் எழுகிறது.
 
ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குழந்தைகள் திருமணம் குறித்த கவலையை வெளியிட்டுள்ளது. தெற்காசியப் பகுதிகளில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

நாட்டில் குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டுவர விரும்பினால், அந்நாடு இன்னும் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்துகிறது. 
தற்போது, 2041ஆம் ஆண்டிற்குள் நாட்டில் இருந்து குழந்தை திருமணங்களை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவோம் என்று வங்கதேசம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

"குழந்தை திருமணம் என்பது மனித உரிமை மீறல்... இதனால் குழந்தைகளின் பால்யப் பருவமே அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது, கொள்ளையடிக்கிறது" என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வீரா மெண்டோன்கா (Veera Mendonca) தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

"சிறுமிகளின் வாழ்க்கை மற்றும் கல்விக்கான உரிமைகளைப் பாதுகாக்க நாம் இப்போது பல விதங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்.  வன்முறை மற்றும் சுரண்டலுக்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்" என்று வீரா கூறுகிறார். 

பங்களாதேஷில் சுமார் 38 மில்லியன் பெண்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது நாட்டில் இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட பாதி என்பது நிலைமையின் தீவிரத்தை புரிய வைக்கும்.

1970 களில், பங்களாதேஷில் குழந்தை திருமண விகிதம் 90% ஆக இருந்தது, அதன் பின்னர் அது 51 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

தற்போது நிலைமை ஓரளவு மேம்பட்டிருப்பதாக ஆறுதல் அடைந்தாலும், தெற்காசியாவில் சிறார்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விகிதம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 என சட்டங்கள் வரையறுத்துள்ளன.

2015 ஆம் ஆண்டில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை ஏற்றுக்கொண்டபோது, பங்களாதேஷ் உட்பட 190 ஐ.நா. உறுப்பு நாடுகள் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்தன.

தற்போது உலக அளவில் கொரோன பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறையான தாக்கத்தால், தொழில், வணிகம் மற்றும் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாலும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தாலும், நாட்டில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை உயர்வதற்கான அபாயங்கள் அதிகரித்துள்ளன. வருமான இழப்பு மற்றும் பள்ளிகள் மூடியிருப்பதால் வீடுகளில் இருக்கும்போது, மன அழுத்தம் அதிகமாகக்கூடும், இது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

நம்ப முடியவில்லையா? படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News