ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர்.
இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்துல் வாகித் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். ‘‘காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது. எனவே காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘‘பாகிஸ்தானில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டது.
>பொது இடங்களில் உடனடியாக, காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது.
>மேலும் ஊடகங்கள் காதலர் தின நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
>தனி நபர்களின் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்ற போதும், அரசு நிறுவனங்கள் அதை கொண்டாடவும், ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
>காதலர் தினம், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என தொடரப்பட்ட தனியார் மனுவின் மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம் என்றும் அது பாகிஸ்தான் கலாசாரத்தை சேர்ந்தது அல்ல என்றும் பாகிஸ்தானிய அதிபர் மம்னூன் ஹுசேன் தெரிவித்திருந்தது குறிபிடத்தக்கது.