Copa America: லாட்டாரோ மார்டினெஸ் அடித்த அந்த கோல்... 16ஆவது முறையாக சாம்பியன் ஆனது அர்ஜென்டீனா!

Copa America Final 2024: கோபா அமெரிக்கா 2024 தொடரில் கொலம்பியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனா அணி கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 16ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 15, 2024, 10:55 AM IST
  • கோல் அடிக்க முடியாத விரக்தியிலும், காயத்தாலும் மெஸ்ஸி கண்ணீருடன் வெளியேறினார்.
  • 112ஆவது நிமிடத்தில் லாட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்தார்.
  • தொடர்ந்து 2ஆவது முறையாக கோபா அமெரிக்கா தொடரை அர்ஜென்டீனா கைப்பற்றுகிறது.
Copa America: லாட்டாரோ மார்டினெஸ் அடித்த அந்த கோல்... 16ஆவது முறையாக சாம்பியன் ஆனது அர்ஜென்டீனா! title=

Copa America Final 2024 Argentina vs Colombia: கடந்த ஒரு மாதமாகவே கால்பந்து சீசன் எனலாம். ஒருபுறம் ஐரோப்பிய நாடுகளின் ஈரோ கோப்பை (Euro Cup 2024) தொடரும், மறுபுறம் அமெரிக்க நாடுகளின் கோப்பா அமெரிக்கா (Copa America 2024) தொடரும் ஒருங்கே நடைபெற்றன. ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த தொடர்கள் இந்திய நேரப்படி ஜூலை 15ஆம் தேதியான இன்றோடு நிறைவடைந்தன. 

குறிப்பாக, கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.45 மணிக்கு தொடங்கியது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜென்டீனா - கொலம்பியா அணிகள் மோதின. அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு இது பெரும்பாலும் கடைசி சர்வதேச தொடராக இருக்கலாம் என்பதால் அந்நாட்டு ரசிகர்களும், ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் இன்றைய போட்டியை மிகவும் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

கண்ணீர்விட்டு கதறிய மெஸ்ஸி

ஆனால் போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இரு அணிகளின் தடுப்பாட்டம் மிகச்சிறப்பாக இருந்த நிலையில், ஒரு கூட யாராமலும் அடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன் கோல் பக்கத்தில் கூட பந்து போகாதபடி இரு அணிகளும் பார்த்துக்கொண்டன. சிற்சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை இரு அணிகளும் கோலாக மாற்றவில்லை. இதனால் முதல் பாதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமா 90 நிமிடங்களிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. 

முன்னதாக, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியால் அவதிப்பட்ட லியோனல் மெஸ்ஸியால் இன்றைய போட்டியில் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் அவரின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து தன்னால் பங்களிக்க முடியவில்லை என்பதாலும், காயத்தையும் எண்ணியும் லியோனல் மெஸ்ஸி கதறி அழுதார். மெஸ்ஸி களத்திற்கு வெளியே அழுதபடி அமர்ந்திருக்க, மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அர்ஜென்டீனா ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி, அவரையும் அணியையும் ஆறுதல்படுத்தினர்.

மேலும் படிக்க | 2024ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெரும் டாப் 10 விளையாட்டு வீரர்கள் - லிஸ்டில் 'இவர்கள்' இல்லை!

லாட்டாரோ மார்டினெஸ் அடித்த அந்த கோல்

தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு பின்னர் கூடுதல் நேரமாக 30 நிமிடம் கொடுக்கப்பட்டது. அதிலும் இரண்டு போாதியாக முதல் 15 நிமிடமும், இரண்டாவது 15 நிமிடமும் போட்டி நடைபெற்றது. அதன் 105ஆவது நிமிடம் வரையிலும் எந்தவொரு கோலும் பதிவாகவில்லை. அடுத்து சிறு இடைவெளிக்கு பின் கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியை தொடங்கிய அர்ஜென்டீனா அணி ஒரு திடீர் மாற்றத்தை செய்தது அதிரடியை தொடங்கியது. மூன்று வீரர்களை வெளியேற்றி, மூன்று புதிய மாற்று வீரர்களை களமிறக்கி கோலை நோக்கி அதிரடியை காண்பிக்க தொடங்கியது. 

இந்த வியூகத்திற்கு பலன் கிடைத்தது. ஜியோவானி லோ செல்சோ கொடுத்த அசிஸ்டுட்டை சரியாக பயன்படுத்திய லாட்டாரோ மார்டினெஸ் 112ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அர்ஜென்டீனா ரசிகர்களுக்கும், கண்ணீரில் கதறிக்கொண்டிருந்த லியனோல் மெஸ்ஸிக்கும் மிகப்பெரிய பரிசை வழங்கினார். மைதானமே மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடியது. மெஸ்ஸி கண்களில் கண்ணீர் மறைந்து, முகம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்தது, உலகமே அந்த கணத்தை கொண்டாடி தீர்த்து எனலாம்.

16ஆவது முறையாக சாம்பியன்

அந்த கோலுக்கு பின்னர் இருந்த 8 நிமிடங்களையும் அர்ஜென்டீனா சிறப்பாக தடுத்தாடி கொலம்பியாவை கோல் போடவிடாமல் தடுத்து தங்களின் வெற்றியை உறுதிசெய்தனர். ஒருவேளை கோல் அடிக்கவில்லை என்றால் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு போட்டி சென்றிருக்கும். ஆனால், அதுவரை செல்லவிடாமல் கூடுதல் நேரத்திலேயே வெற்றிக்கு தேவையான கோலை அடித்து லாட்டாரோ மார்டினெஸ் அசத்தியதால், 2024 கோப்பா அமெரிக்கா தொடரின் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டீனா வாங்கியது. 

குறிப்பாக, 16ஆவது முறையாக கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றி அர்ஜென்டீனா சாதனை படைத்துள்ளது. உருகுவே அணியை பின்னுக்குத் தள்ளி அதிக கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றிய அணியாக அர்ஜென்டீனா உருவெடுத்துள்ளது. உருகுவே 15 முறை வென்றுள்ளது. மேலும் கடந்த முறை 2021ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா தொடரையும் அர்ஜென்டீனா அணியே வென்றிருந்த நிலையில், தற்போது சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக தக்கவைத்திருக்கிறது.

ஈரோ கோப்பையை வென்ற ஸ்பெயின்

2021 கோப்பா அமெரிக்கா, 2022 பிபா உலகக் கோப்பை, 2024 கோப்பா அமெரிக்கா என தொடர்ச்சியாக அர்ஜென்டீனா கோப்பைகளை குவித்து வருகிறது. 2008 முதல் 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கோப்பைகளை குவித்து வந்த ஸ்பெயின் அணியின் சாதனையை அர்ஜென்டீனா தற்போது சமன் செய்துள்ளது. முன்னதாக இன்று நள்ளிரவில் நடைபெற்ற ஈரோ கோப்பை 2024 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் நான்கு முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News