யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸைத் வீழ்த்தி போர்ச்சுகல் சாம்பியன் பட்டம் வென்றது
பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். இதில், ரொனால்டோ 25 நிமிடங்கள் கூட ஆட முடியவில்லை. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாமல் கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ.
பிரான்ஸ் அணி கோலடிக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டாலும் எதுவும் பலனளிக்கவில்லை. ஆட்டநேரத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், 109-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் ஈடர் கோல் அடித்தார். இறுதியில் 1-0 என்கிற கோல் கணக்கில் வென்று யூரோ கோப்பையைத் தட்டிச் சென்றது போர்ச்சுகல் அணி. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி இதுவரை எந்தவொரு பெரிய போட்டியிலும் வென்றதில்லை என்ற நீண்ட நாள் குறை இந்த வெற்றியின் மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பிரான்ஸ் 18 வெற்றிகளையும், போர்ச்சுகல் 5 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஓர் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 1975 முதல் தற்போது வரையில் பிரான்ஸுக்கு எதிராக 10 போட்டிகள் தோல்வியடைந்ததை போர்ச்சுகல் தற்போது முடிவுக்குக் கொண்டுவந்தது.