ஐபிஎல் 2017: 23-வது லீக், குஜராத் அதிரடி வெற்றி!!

Last Updated : Apr 22, 2017, 10:08 AM IST
ஐபிஎல் 2017: 23-வது லீக், குஜராத் அதிரடி வெற்றி!! title=

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. 4-ஆவது ஓவரை கேப்டன் ரெய்னா வீசினார். அவருடைய பந்தை அடித்து ஆட முற்பட்ட நரேன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்த போது, பாக்னரிடம் கேட்ச் ஆனார். 

அடுத்த வந்த ராபின் உத்தப்பா, கம்பீரும், அதிரடியாக ஆட 10 ஓவர்களில் 96 ரன்களை எட்டியது கொல்கத்தா. அந்த அணி 11.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது கம்பீரின் விக்கெட்டை இழந்தது. அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது கொல்கத்தா. 

குஜராத் தரப்பில் பிரவீண் குமார், ஜேம்ஸ் ஃபாக்னர், பாசில் தம்பி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய குஜராத் அணியில் ஆரோன் ஃபிஞ்ச்-பிரென்டன் மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.3 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தது. ஆரோன் ஃபிஞ்ச் 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்து வெளியேற, கேப்டன் சுரேஷ் ரெய்னா களம்புகுந்தார்.

மெக்கல்லம் தொடர்ந்து அதிரடி காட்ட, குஜராத் அணி 5 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன்பிறகு தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 6.2 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு தினேஷ் கார்த்திக் 3, இஷன் கிஷான் 4, டுவைன் ஸ்மித் 5 ரன்களில் வெளியேற, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் வெளுத்து வாங்கிய ரெய்னா 32 பந்துகளில் அரை சதம் கண்டார். மறுமுனையில் நின்ற ஜடேஜாவும் தன் பங்குக்கு அதிரடியாக ரன் சேர்க்க, குஜராத்தின் வெற்றி எளிதானது. 

18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து வெற்றி கண்டது குஜராத். 

கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Trending News