டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருந்த 18வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க வேண்டி இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் தொடங்கவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. மழையின் காரணமாக டாஸ் கூட போடப்படவில்லை.
ஒருவேளை மழை பெய்வது நின்றுவிட்டால், 50 ஓவருக்கு பதிலாக குறைந்த ஓவரில் ஆட்டம் ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்தால் ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுக்குறித்து நடுவர்கள் கூறுகையில், மழையின் காரணமாக ஆட்டம் தடைப்படுவது துரதிர்ஷ்டமானது. கடந்த 48 மணி நேரத்தை கணக்கில் கொண்டால், இன்றைய தினம் வானிலை கடினமாக இருந்தது. வானிலை முன்னறிவிப்பு என்னவென்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஞாயிறு அன்று (இந்தியா-பாகிஸ்தான்) நடக்க உள்ள ஆட்டத்தில் வானிலை நன்றாக இருக்கும் எனக் கூறினார்கள்.
இதன்மூலம், இன்றைய போட்டி டாஸ் போடாமலே கைவிடப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் இந்தியா அணி 5 புள்ளியுடன் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி, 3வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2019 உலகக் கோப்பை தொடரை பொருத்த வர மூன்று ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டி டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் DLS method) முறைப்படி நடத்தப்பட்டது.