IPL 2019 தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்... வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி...
IPL 2019 தொடரின் 51-வது லீக் ஆட்டம் மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 24(18) ரன்களில் வெளியேற மறுமுனையில் குவிண்டன் டீ காக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69(58) ரன்கள் குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே குவித்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைஸர்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க தத்தளித்த ஐதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய மனிஷ் பாண்டே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 71(47) ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷ் பாண்டே வெற்றி இலக்கை சமன் செய்ய உதவினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணியும் 162 ரன்கள் குவித்தது. இதனையடுத்து ஆட்டம் சமனில் நின்றது. இதைத்தொடர்ந்து வெற்றி அணியை தேர்வு செய்ய இரு அணிகளுக்கும் இடையே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.