ஐபிஎல் 2022ன் 49ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதின. புனேவில் 7.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடர் தோல்விகளிலிருந்து மீள்வதற்காக பெங்களூருவும், கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றியை தக்க வைக்க சென்னையும் களமிறங்கின. பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக டூ ப்ளசிஸும், விராட் கோலியும் களமிறங்கினர். நிதானமாக தொடங்கிய இருவரும் போகப்போக தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.
இதனால் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்களுக்கு 50 ரன்களை எட்டியது. நிலைத்து நின்று இந்த ஜோடி ஆடும் என எதிர்பார்த்திருந்த சமயத்தில், டூ ப்ளசிஸ் மொயின் அலி ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்திலேயே 3 ரன்களுக்கு ரன் அவுட்டானார். மேக்ஸ்வெல் அவுட்டான அடுத்த ஓவரிலேயே கோலியும் போல்டாக ஆர்சிபி அணி 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் பட்டிதாரும், லாம்ராரும் இணைந்தனர். பட்டிதார் தீக்ஷனா வீசிய 15ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்ற அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பட்டிதாருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் - லாம்ரார் ஜோடி சென்னை பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டு தேவைப்பட்ட நேரத்தில் அதிரடி காட்டியது.
18ஆவது ஓவரில் 14 ரன்கள் அடித்து அசத்திய லாம்ரார் 19ஆவது ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த ஹசரங்கா, ஷாபாஸ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேற தினேஷ் கார்த்திக் இறுதி ஓவரில் அதிரடி காட்டினார். அந்த ஓவரில் அவர் 16 ரன்கள் அடித்ததன் மூலம் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது.
மேலும் படிக்க | ஐசிசி தரவரிசை: டி20ல் இந்தியா முதலிடம்
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் கான்வேயும் தொடக்கம் தந்தனர். பெங்களூரு அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ட இந்த இணை பவர் ப்ளே முடிவில் 51 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்தது.
உடனடியாக இந்த இணையை பிரிக்காவிட்டால் நிலைமை விபரீதமாகும் என்பதை உணர்ந்த கேப்டன் டூ ப்ளசிஸ் ஷாபாஸ் அகமதுவை பந்துவீச அழைத்தார். அதற்கு பலனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட் கிடைத்தது. 28 ரன்களில் ஆட்டமிழந்தார் ருதுராஜ்.
அவரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பா களம் புகுந்தார். அவரை 1 ரன்னில் மேக்ஸ்வெல் வெளியேற்றினார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு அடுத்து வந்த ராயுடுவையும் சொற்ப ரன்களில் மேக்ஸ்வெல் அவுட்டாக்கினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த சூழலில் மொயின் அலியும், கான்வேயும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆர்சிபி பந்துவீச்சை எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிய கான்வே 55 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து இணைந்த ஜடேஜா - மொயின் அலி இருவரும் அணியை காப்பாற்றுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 4 ஓவர்களில் 52 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்கினார்.
தோனி - மொயின் ஜோடி மேஜிக் செய்யும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்க மொயின் அலி 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மொயின் சென்ற வேகத்திலேயே தோனியும் ஆட்டமிழக்க சென்னை அணியின் ரசிகர்களுக்கு இடி இறங்கியது. அதன் பிறகு களமிறங்கியவர்களும் ஏமாற்ற சென்னை அணியை பெங்களூரு அணி 14ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR