IPL 2019 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.
IPL 2019 கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைப்பெற்றது. இப்போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற மும்பை அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.
இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சிக்சர் மழை பொழிந்தார். வெறும் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார்.
ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ரன்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை.
மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் நிதானமாக விளையாடி அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தார்.
மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு 9-வது விக்கெட்டை இழந்தது. முன்னதாக பந்துவீச்சின் போது புமராவிற்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் பேட்டிங் செய்ய இயலவில்லை. எனவே மும்பை அணி 10-வது மட்டையாளரை இறக்கவில்லை என அறிவித்தது.
இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.