பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு....
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2 ஆம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இட ஒதுக்கீடு தொடர்பான பொதுபட்டியலில் உள்ள பொருளாதார ரீதியில் மிகவும் பிற்பட்டோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதல் முற்றிலும் முரணானது எனவும், அரசியல் சட்டத்திற்கும் சமூக நீதிக்கு எதிரானது எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும், தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், `பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு தவறானது. இது சமூக நீதிக்கு எதிரானது. லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு சட்டப்பேரவையில் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படாததை அடுத்து திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.