லஸ்கர் இ தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயது மற்றும் ஜகீர் உர் ரெஹ்மான் லக்வி ஆகியோரின் பெயர்களை மோடி மறந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ ஹஃபீஸ் சயதை சர்வதேச பயங்கரவாதியாக யார் அறிவித்தது..? லக்வியின் பெயர் உங்களுக்கு மறந்துவிட்டதா..? இந்த 2 பேரின் பெயர்களும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கப்பட்டன. மசூத் அசார் ஒன்றும் முதல் நபர் அல்ல. 2009-லேயே நாங்கள் அதற்கான வேலையை தொடங்கிவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மோடி கதையின் கடைசி காட்சி குறித்து மட்டும் பேசுகிறார். இது ஒரு படத்தின் கடைசி காட்சியை மட்டும் பார்ப்பது போன்றது. முந்தைய காட்சிகள் நிலை என்ன..? 1999-ல் அசார் சிறையில் இருந்த போது அவரை விடுவித்தது யார்..? அவரை சிறப்பு விருந்தினர் போல் நடத்தியது யார்..” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
10 ஆண்டுகால தடைக்கு பிறகு சீனா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நாவில் ஆதரவளித்தது. அதிலிருந்து மோடி மற்றும் இதர பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.