AIADMK Latest Update: கடந்த ஆண்டு ஜூலை 11இல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு உத்தரவிட்டிருந்தார்.
அவரது தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், 2 ஆயிரத்து 460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என தெளிவுபடுத்தி இருந்தார். அதன்படி பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்த தீர்மானங்களும் செல்லும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பினர் நீக்கத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்கிற விதி மீறப்பட்டுள்ளதால், ஒபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாறாது!
அனைத்து தரப்பு வாதங்கள்
இந்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் உள்ளிட்டோர் உடனடியாக மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, கடந்த ஏப்ரல் 20இல் தொடங்கிய முதல் நாள் விசாரணை, ஏப்ரல் 21, ஏப்ரல் 24, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 15 ஆகிய தேதிகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கபட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் தள்ளிவைத்தனர்.
அதன்படி இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் இன்று (ஆக. 25) தீர்ப்பளித்த நீதிபதிகள், பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து, பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உடனடி பிரஸ்மீட்
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"இந்த தீர்ப்பின் மூலம் நீதி , தர்மம் , உண்மை வென்றுள்ளது. எனது தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். மாநிலத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்" என்றார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தங்களை சம்பந்தப்படுத்தி கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு,"யாரோ ஒருவர் ரோட்டில் போகிறவர் எல்லாம் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுவது தவறு. எனது ஆட்சியின் போது பல சம்பவங்கள் நடந்தது. அதனை சட்டத்தின்படி நாங்கள் கையாண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிமுக ஆட்சியின் போது சட்டத்தின் ஆட்சிதான் நடந்தது. ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் தனபால், அவர் மூன்று மாதம் சிறையில் இருந்தவர். நில அபகரிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அவர் கூறுவதை எல்லாம் ஊடகங்கள் வெளியிடுவது தவறு. கனகராஜ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலாவின் டிரைவராக மட்டுமே பணியாற்றியவர். ஒரு நாள் கூட ஜெயலலிதாவுக்கு கனகராஜ் கார் ஓட்டவில்லை. எனவே இனி ஊடகங்கள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என கூறினால் நான் வழக்கு தொடர்வேன்" என்றார்.
தொடர்ந்து மதுரை மாநாடு குறித்து கூறும்போது, "ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியுள்ளோம். பதினைந்து லட்சம் பேர் திரண்டனர். இதுவே அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
சந்திராயன் நிலவில் இறங்கியது. ஒரு வரலாற்று சாதனையாகும். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முன் நின்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளேன்" என்றார்.
தொடர்ந்த அவர்,"இனி அதிமுகவில் ஒரு சிலரை தவிர்த்து அதிமுகவுக்கு உழைத்தவர்கள் கட்சி உயர பாடுபட்டவர்கள் பிரிந்து சென்று வர விருப்பப்பட்டால் அவர்களை சேர்த்துக் கொள்வோம். ஆனால் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை" என்றார்.
மேலும் படிக்க | நாடார் என்பதால் சைலேந்திர பாபுவுக்கு TNPSC தலைவர் பதவியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ