பங்காரு அடிகளார் ஆன்மீகத்தை முற்போக்கு தளத்துக்கு எடுத்துச் சென்றவர்: தலைவர்கள் புகழாரம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரான பங்காரு அடிகளார் மரணத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆன்மீகத்தை முற்போக்கு தளத்துக்கு எடுத்துச் சென்றவர் என புகழாரம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 19, 2023, 08:16 PM IST
  • மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு
  • தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
  • ஆன்மீகத்தை முற்போக்கு தளத்துக்கு எடுத்துச் சென்றவர் என புகழாரம்
பங்காரு அடிகளார் ஆன்மீகத்தை முற்போக்கு தளத்துக்கு எடுத்துச் சென்றவர்: தலைவர்கள் புகழாரம் title=

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும், பக்தர்களோடு அம்மா என அன்போடு அழைக்கப்படும் பங்காரு அடிகளார் அவர்கள் மாரடைப்பு காரணமாக 82 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலகெங்கும் இருக்கும் செவ்வாடை பக்தர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெண்களை அனைத்து நாட்களிலும் வழிபாடு செய்யலாம் என்றும், கோயில் கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதித்து வழிபாட்டில் பெரும் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அவரது மறைவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், " மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.  அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள். உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு " என தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் " மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அங்குள்ள கோவில் கருவறையில் அனைத்து நாட்களிலும் பெண்கள் பூஜை செய்யலாம் என்ற முறையை அமல்படுத்தி ஆன்மிகப் புரட்சி செய்தவரும், சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்தவருமான பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்" என தெரிவித்துள்ளார். 

 

டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், " கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது." என கூறியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளுர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மறைவு வேதனை அளிக்கிறது." என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்," கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு" என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | வெள்ளியங்கிரி FPO-க்கு தேசிய விருது வழங்கி கெளரவிப்பு..! சத்குரு வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News