புதுவையில் பந்த்; ஆனால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்!

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Last Updated : Nov 26, 2018, 08:28 AM IST
புதுவையில் பந்த்; ஆனால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! title=

புதுச்சேரி: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென கூறி உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து கேரளா முழுவதிலும் உள்ள இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, போராட்டத்திற்கு காரணமானவர்கள் என கூறி பலரை கேரளா அரசு கைது செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

அதனை கண்டித்து புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தபடுகிறது. முழு அடைப்பு நடைப்பெறுவதை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், அவசர காரணங்கள் தவிர பிறர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளார். 

பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பேருந்துக்கள் இயங்கவில்லை. எனினும் காவலர்கள் உதவியுடன் புதுச்சேரி அரசு பேருந்துக்கள் மற்றும் தனியார் பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

புதுச்சேரி நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பந்த் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், புதுச்சேரியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும், விடுமுறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக முழுஅடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சினைக்காக புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது தேவையற்றது.

இதனை காரணம் காட்டி யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். கடைக்காரர்களை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது செய்யப்படுவார்கள். இதுதொடர்பாக காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தகர்களையும் அழைத்து பேசி உள்ளோம் என தெரிவித்தார்.

Trending News