அரசு கேபிள் டிவியின் மாத சந்தா ரூ.130-ஆக குறைத்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்!
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் முறை ஒளிபரப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 35.12 லட்சம் செட்ஆப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டு அதன்மூலம் கேபிள் டிவி சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதன் கட்டணங்கள் உயர்வாக உள்ளது என பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு முன்வைத்து வந்த நிலையில், கட்டணத்தை குறைத்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து சுமார் 35.12 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தற்பொழுது தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற ஆகஸ்ட் 10, 2019 முதல் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
வேலூர் தவிர்த்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது.