சென்னை எழும்பூரில் பேரணி நடத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது.
இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பேரணியில் திமுக தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினர் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், காவல் துறையினர் உத்தரவை பேரணி நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர் உத்தரவை மீறியது போன்றவற்றுக்காக சட்டப்பிரிவு 143, 188, 341 ஆகியவற்றின்கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.