காவிரி : நிபுணர்கள் குழு அமைத்தது மத்திய அரசு

Last Updated : Oct 6, 2016, 10:16 AM IST
காவிரி : நிபுணர்கள் குழு அமைத்தது மத்திய அரசு  title=

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் அந்த குழு 17-ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இந்த நிபுணர் குழுவின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா மற்றும் கோதாவரி படுகை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து உள்ளது.

இந்த நிபுணர்கள் குழுவின் கூட்டம் பெங்களூருவில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த குழுவினர், அணைகளுக்கு சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து நாளைய கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன் பிறகு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு சென்று அங்குள்ள நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவற்றை பார்வையிட்டு வரும் 17-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

Trending News