தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

தமிழகம்  முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது.

Last Updated : Mar 12, 2020, 10:33 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு! title=

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்., 

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில், முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும்.

6 மற்றும் 7-ம் கேள்விகள் அந்த வீடு வசிப்புக்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8 முதல் 10-ம் கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11 முதல் 31-ம் கேள்விகள் வீட்டில் இருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாக இருக்கும்.

கணக்கெடுப்பின்போது, வீட்டு எண், வீட்டின் சுவர், தரை, மேற்கூரை போட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வீட்டின் உறுதி நிலை, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வீட்டில் தலைவர் ஆணா, பெண்ணா?, வீட்டு உரிமையாளர் யார்? வீட்டில் உள்ளவர்களின் சாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? ஆகிய கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், திருமணமானவர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதியின் ஆதாரம் எது? எந்த வகை கழிவறை உள்ளது? குளியல் வசதி உள்ளதா? கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளதா? கியாஸ் வசதி, இணையதள வசதி, கம்ப்யூட்டர், மடிக்கணினி வசதி, ரேடியோ, டி.வி., தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர வாகனம், கார், ஜீப், வேன், உணவுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய தானியம், சமைக்க பயன்படுத்தப்படும் எரிபொருள், மின்சார வசதி ஆதாரம் ஆகிய கேள்விகளும் கேட்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News