புதுடெல்லி: இந்திய தபால்துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டும் எனக்கூறி, இதற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. மேலும் இரு அவைகளிலும் இது எதிரொலித்தது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அன்று நடைபெற்ற தபால்துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அனைத்து தபால் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
இந்திய தபால் துறையில் உள்ள 1039 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 14 ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றது. தேர்வில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இடம் பெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி வினாத்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தேர்வாளர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. அதன் எதிரொலி லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவிலும் கனமாக ஒலித்தது. திமுக, அதிமுக உட்பட மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக மாநிலங்களவையில் தமிழக எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், இன்று மாநிலங்களவை பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்திய தபால்துறை நடத்தும் தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய தபால்துறை தேர்வுகள் முன்பு போலவே தமிழ் உட்பட அனைத்து மாநில பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அன்று இந்தி மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்ற தபால்துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும், அதற்கு பதிலாக அனைத்து பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் எனவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் தாமதமாக பதில் அளித்தற்கு மன்னிப்பும் கோரினார் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.