வேலுமணிக்கு எதிராக 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2021, 04:05 PM IST
வேலுமணிக்கு எதிராக 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை - உயர்நீதிமன்றம் உத்தரவு! title=

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்படிருந்தது.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி பொன்னி தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து  ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

velumani

வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை வழக்கு ஆவணமாக பயன்படுத்தினால் அதை முன்னாள் அமைச்சர் கீழமை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தற்போதைய நிலையில் அந்த அறிக்கையை வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.  வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ALSO READ 39 கோடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News