தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு அமர்ந்திருந்தார். இதற்க்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-
பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார். அதாவது விழாவில் பதவி அடிப்படையில் வி.ஐ.பி.களுக்கு இடம் வழங்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன்.
ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் வழங்கப்பட்டது ஸ்டாலினையோ அல்லது திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாநில முன்னேற்றத்துக்காக ஸ்டாலினும், திமுகவும் செயல்படுவதற்கு எனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.