"ரிசர்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள ரூ.1.76 லட்சம் கோடியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் 28.09.19 அன்று நடைபெற்ற காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று, தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார். அவர் அவர் தெரிவிக்கையில்., "காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பற்றுள்ள தஞ்சை தெற்கு மாவட்டக் கழகத்தின் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் அவர்களே, இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியை துவங்கி வைத்து உரையாற்றி அமர்ந்துள்ள திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் செயலாளர் - முன்னாள் அமைச்சர் நேரு அவர்களே, வரவேற்று மகிழ்ந்திருக்கும் மாநில விவசாய அணியின் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் - முன்னாள் அமைச்சர் பழநிமாணிக்கம் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் இராமலிங்கம் அவர்களே, மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாய அணியின் செயலாளர்கள் கே.பி.இராமலிங்கம் அவர்களே, கரூர் சின்னசாமி அவர்களே, இங்கு எனக்கு முன்பு மிகச்சிறப்பான வகையில் பல்வேறு அனுபவங்களை அடிப்படையாக வைத்து உரையாற்றி அமர்ந்திருக்கும் என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அருமைப் பெரியவர் காவிரி இரங்கநாதன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாய சங்க நிர்வாகி சண்முகம் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரன் அவர்களே, ம.தி.மு.க.,வைச் சேரந்த ஆடுதுறை முருகன் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பசுமைவளவன் அவர்களே, விவசாய சங்கத்தைச் சார்ந்த சேகரன் அவர்களே, வானிலை செல்வக்குமார் அவர்களே, மற்றும் இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியை சிறப்பித்து பங்கேற்றிருக்கும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களே, டெல்டா மாவட்டத்திற்குட்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாலர்களே, மாவட்ட பொறுப்பாளர்களே, வருகை தந்திருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்களே, நிறைவாக நன்றி நல்கவிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் அவர்களே, மாநில விவசாய அணியைச் சார்ந்த அருட்செல்வன் அவர்களே, மணி அவர்களே, தொழிலாளர் அணியைச் சார்ந்த இராஜரத்தினம் அவர்களே, திரளாக வருகை தந்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளே, விவசாய சங்கத் தோழர்களே, அன்பிற்குரிய தாய்மார்களே, என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே...உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு மாலை வணக்கதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என்று நம்முடைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழக நிர்வாகிகளை, விவசாய அணியில் இருக்கும் நிர்வாகிகளை நான் அழைத்து அறிவாலயத்தில் அமர்ந்து விவாதித்த நேரத்தில், இதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உடனடியாக அந்தப் பணியில் ஈடுபடுகின்றோம் என்று உறுதிதந்து, அந்த உறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று காலையிலிருந்து, இந்த நிமிடம் வரையில் மிகச் சிறப்பான வகையில் கருத்தரங்கம் நடந்திருக்கின்றது என்றால், அதற்கான பணியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கும் நம்முடைய கழக நிர்வாகிகளுக்கு விவசாய அணியைச் சார்ந்திருக்கும் தோழர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பின் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை, வாழ்த்தை, பாராட்டை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் எனக்கிருக்கும் பணி, நிறைவு செய்து பேருரை ஆற்றிட வேண்டும். உரையைப் பொறுத்தவரையில் இது நிறைவுரையாக இருக்கலாம். ஆனால், பணியைப் பொறுத்தவரை, நிறைவடைந்திருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதைத்தான் நான் சொல்லியாக வேண்டும்.
ஆனால், விரைவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வருகின்றபோது, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் - நிறைவு செய்யப்படும் என்ற அந்த உறுதியோடு இந்த கருத்தரங்கத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஏறக்குறைய 10 தீர்மாங்கள் இங்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இங்கு நம்முடைய துரை சந்திரசேகர் அவர்கள் பேசுகிறபோது, நான் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டாகிறது என்று குறிப்பிட்டுச் சொன்னார்.
நான் நினைத்துப் பார்க்கின்றேன்!, தலைவர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்திற்குள் நுழைந்து அவர் பேசிய முதல் கன்னிப்பேச்சாக, விவசாய தொழிலாளர்கள் பிரச்சினையாக இருந்த நங்கவரம் பிரச்சினை பற்றித்தான் பேசினார்கள். 'நாடு பாதி; நங்கவரம் பாதி', 'கையேறு வாரம்; மாட்டேறு வாரம்' என்று விவசாயத் தொழிலாளர்களை ஒரு கொத்தடிமைபோல் நடத்திய பெரிய கொடுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக நடைபெற்றப் போராட்டம் நங்கவரம் போராட்டம்.
அந்தப் போராட்டத்தை - விவசாயிகளின் பிரச்சினைகளை மையமாக வைத்துதான் தலைவர் கலைஞர் அசர்களின் முதல் கன்னிப்பேச்சு அமைந்தது.
இப்போது நான் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், என்னுடைய முதல் பேச்சு விவசாயிகளின் கருத்தரங்கம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிதான் என எண்ணிப் பார்க்கும்போது, நான் உள்ளபடியே பெருமைப்படுகின்றேன் - மகிழ்ச்சியடைகின்றேன்!
இந்த கருத்தரங்கைப் பொறுத்தவரையில், வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், நூறு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஒப்பான கருத்தரங்கம் - இந்த ஒரே ஒரு கருத்தரங்கம். அதை யாராலும், மறுத்திட மறைத்திட முடியாது!
அரசியல் என்பது ஒரு மனிதனின் உடல் என்றால், விவசாயம் என்பது ஒரு மனிதனின் உயிர். உயிரற்று உடல் இயங்குவது இல்லை!
அதனால் இன்றைக்கு மத்திய - மாநில அரசுகளால், தமிழனின் உடலும் உயிரும் சேதமாகிக் கொண்டு இருக்கிறது. அந்த ஆபத்தை உணர்ந்துதான் தஞ்சையில் இன்றைக்கு நாம் கூடியிருக்கிறோம்.
காலை முதல் மாலை வரையில் இங்கு எடுத்துவைக்கப்பட்டிருக்கும் பேச்சுகள், கருத்துகள், தீர்மானங்கள், இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கின்றபோது நம்முடைய உள்ளத்தில் ஒரு அச்சம் - பெரிய பயம் ஏற்பட்டிருக்கின்றது!
இந்த நாட்டின் எதிர்காலம் என்ன?
தமிழகத்தின் எதிர்காலம் என்ன?
நம்முடைய எதிர்காலச் சந்ததியினர் என்னவாக ஆகப் போகிறார்கள்?
எதிர்காலத் தலைமுறைக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம்?
- என்ற அச்சம் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த அச்சத்திற்கு காரணம், வேளாண்மையைப் பற்றி நல்ல செய்திகள் நம்முடைய காதுகளில் விழவில்லை.
காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறது; காவிரி டெல்டாவே வறண்டு விட்டது; குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை; பருவ மழை பொய்த்துவிட்டது; மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்படுவது இல்லை; விவசாயமே நலிவடைந்து விட்டது; விவசாயிகள் தற்கொலை அதிகமாகி வருகிறது; விவசாயிகள் கூலி வேலைக்கு போய்விட்டார்கள்.
விவசாயிகள் வேறு மாநிலத்துக்கு இடம்பெயரும் நிலைக்குக்கூட தள்ளப்பட்டிருக்கிறார்கள். விவசாய பூமியை பாழாக்கி, பழி வாங்கக்கூடிய வகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளிடம் நிலங்களை பலவந்தமாக அபகரித்து எட்டுவழிச்சாலை போடுகிறார்கள்.
இப்படி விவசாயம் பற்றிக் கேள்விப்படும் செய்திகள் அனைத்துமே நல்லவிதமாக அமைந்திருக்கிறதா என்பதைப் பற்றி, அறிவதற்காகத்தான் இந்த இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தை உடனடியாகத் தீர்க்கவில்லை என்றால், தமிழகம் மிக - மிக - மோசமான சூழ்நிலையை அடையும். இது தஞ்சாவூரின் பிரச்சினை மட்டுமல்ல; இது தமிழகத்தின் பிரச்னை! தஞ்சையில் இந்தக் கருத்தரங்கம் நடக்கின்ற காரணத்தால் இது, இதனை தஞ்சையின் பிரச்சினை, காவிரி டெல்டாவின் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது; இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்னை!
காரணம், காவிரிநீரை நம்பி 12 விவசாய மாவட்டங்கள் இருக்கின்றது. காவிரிநீரை நம்பி 19 மாவட்டத்து குடிநீர் தேவை இருக்கிறது. 25 லட்சம் ஏக்கர் நிலம் காவிரிநீரை நம்பித்தான் இருக்கிறது.
பல கோடி மக்கள் காவிரியை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் இதனை எப்படி தஞ்சையின் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியும்? எனவே, இதுபோன்ற கருத்தரங்குகள் தஞ்சையில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க வேண்டும்.
'தஞ்சைக்கு ஆபத்து என்றால் தமிழகத்துக்கே ஆபத்து' என்பதை நாட்டு மக்கள் அனைவருக்கும் உணர்த்தியாக வேண்டும். 'கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை’, என்று காவிரியைப் பற்றி மணிமேகலைக் காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார் பாடினார்.
கோடை காலமே வந்தாலும் காவிரியில் தண்ணீர் வற்றாது என்றார் அவர். ஆனால் இன்று இயற்கையின் சதியால் மட்டுமல்ல, அரசியல் சதியாலும் காய்ந்து போகிறது காவிரி! கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைத் தர மறுக்கிறது. காவிரியில் தண்ணீர் கேட்பது நம்முடைய உரிமை. அதைத் வழங்க வேண்டியது அவர்களுடைய கடமை!
ஆனால், அந்தக் கடமையை கர்நாடக அரசு தொடர்ந்து நிராகரித்துக் கொண்டிருக்கின்றது. கர்நாடக அரசு இந்தக் கடமையை தவறும்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றபோது உரிமையோடு நாம் குரல் கொடுத்திருக்கிறோம்; அதற்காக வலியுறுத்தியிருகிறோம்; வற்புறுத்தியிருக்கிறோம், அதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறோம்.
1968ம் ஆண்டே காவிரி உரிமை குறித்து, மைசூர் மாநில முதலமைச்சராக இருந்த வீரேந்திர பாட்டீல், மத்திய அமைச்சர் கே.எல்.ராவ் ஆகியோருடன் டெல்லியில் தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக, முதன்முதலில் மற்றொரு மாநிலத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியப் பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான் கிடைத்தது.
அதன்பின்னர், 1969ல் காவிரி உரிமைக்காக குரல் கொடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். காவிரிப் பிரச்சினைக்காக 1971ம் ஆண்டு முதன்முதலில் வழக்குப்போட்ட தலைவரும் நம்முடைய தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.
1990ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயத்தை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமைத்தார்கள்.
காவிரி தீர்ப்பாயம் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், கர்நாடகம் தர மறுத்தது. அதன்பிறகு, தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் காவிரி நதிநீர் ஆணையம் அமைத்துத் தந்தார்கள்.
இந்த ஆணையத்தின் உத்திரவையும் கர்நாடகம் மதிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு தந்தது. அந்த இறுதித் தீர்ப்பு, 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்றது. அதையும், கர்நாடக மாநிலம் நிராகரித்தார்கள்.
இப்போது நடுவர் மன்றத்தின், இறுதி தீர்ப்பின் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. அதையும் தர மறுக்கிறது கர்நாடக அரசு.
ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் மூலமாகத் தான் தமிழகத்தின் உரிமையை தொடர்ந்து காப்பாற்றி வந்திருக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜ.க அரசு மறுத்தது.
பின்னர், உச்சநீதிமன்றம் எச்சரித்ததற்குப் பிறகுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் - காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையமும் இன்றைக்கு முறையாக செயல்படுகிறதா?
மத்திய பாஜக அரசு, தங்களுக்கு தமிழகத்தைவிட கர்நாடக மாநிலம் முக்கியம் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தைப் பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. அதனால்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படவிடாமல் தொடர்ந்து தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த சதியைத் தட்டிக் கேட்கவோ - விமர்சிக்கவோ முதுகெலும்பு இல்லாத ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றது.
எனவே, மத்திய பாஜக அரசு - தமிழக அரசு, கர்நாடக மாநில அரசு ஆகிய மூன்று அரசுகளும் சேர்ந்து காவிரியை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையைத்தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
கர்நாடக அரசைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மாநிலத்து மக்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.
அது அவர்களுடைய மாநிலத்தில் இருக்கும் அரசியல் பிரச்சினை. அந்த உணர்வு தமிழக அரசிற்கு வர வேண்டுமா, வர வேண்டாமா? ஏன் வரவில்லை?
கொள்ளையடிப்பதில் கவனமாக இருக்கின்ற காரணத்தினால்தான் மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள். காவிரிப் பிரச்னையை ஒரு பிரச்னையாகவே அவர்கள் கருதவில்லை.
ஆனால், தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரிநீரை முறையாக பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு யாருக்கு உண்டு? மத்திய பா.ஜ.க அரசுக்குத்தான் இருக்கிறது!
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்கவில்லை. எனவே, வாக்களிக்காத மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை தட்டிக் கேட்காத மத்திய அரசு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை கொண்டு வந்து விவசாய நிலத்தையே நாசம் செய்கிறது. நிலம் என்ற ஒன்று இருந்தால்தானே விவசாயம் செய்வீர்கள், தண்ணீர் கேட்பீர்கள், எனவே, நிலத்தையே சிதைத்திடுவோம் என்ற எண்ணத்தோடு தான் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களைக் கொண்டு வந்து திணித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, காரணம் வேறல்ல!
மீத்தேன், ஹைட்ரோகார்பன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ, சேலம் எட்டுவழிச்சாலை - இவை அனைத்தும் தமிழகத்தின் மீது மத்திய அரசு நடத்துகின்ற ஒரு இரசாயனத் தாக்குதல். இதை யாரும் நீங்கள் மறந்து விடக்கூடாது!
ஒருபக்கம் இதுபோன்ற பிரச்சினைகள்; இன்னொரு பக்கம் பார்த்தீர்கள் என்றால், மொழித்திணிப்பு – தமிழ் மொழிக்கு எதிர்ப்பு!
இந்தித் திணிப்பு, சமஸ்கிருத் திணிப்பு, நீட் தேர்வு, தமிழில் பேசக்கூடாது என்று மத்திய அரசு கலாச்சாரத் தாக்குதலை இன்னொரு பக்கம் நடத்திக் கொண்டு இருக்கிறது.
ரசாயனத் தாக்குதலையும் கலாச்சாரத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு என்பதை நாம் வரக்கூடிய கலக்கட்டத்தில் நிரூபித்தாக வேண்டும்.
இதைச் சொன்னால் மத்திய அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களையெல்லாம் நாம் எதிர்க்கிறோம் என்று ஒரு பிரச்சாரத்தை நடத்துவார்கள்.
மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் - இந்த மண்னை பாதிக்கக்கூடிய திட்டம் எதுவாக இருந்தாலும் - நம் இயற்கையை பாதிக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை உறுதியோடு திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது!
அதேநேரத்தில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டு வாருங்கள். அதில் அரசியல் பார்க்காமல் அதை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம்!
அதில் எந்த மாறுபாடும் - வேறுபாடும் கிடையாது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களால் விவசாயம் குறையும்; விவசாயிகளின் வாழ்க்கை சிதையும்; விவசாயக்கூலி வேலைகளை இழப்பார்கள்; உணவுப்பஞ்சம் ஏற்படும்; உணவுத் தேவைக்காக அண்டை மாநிலத்தில் கையேந்த வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்!
நிலம் பாழ்படும்; விளைநிலம் நச்சுத் தன்மையை அடையும்; நிலத்தடி நீர் மாசுபடும்; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நாங்கள் வளர்ச்சியின் எதிரிகள் அல்ல - இந்தியா வளர வேண்டும். ஆனால் இந்திய மக்களைச் சிதைத்து வளர வேண்டுமா?
இந்தியா வல்லரசு ஆக வேண்டும். அதற்காக இந்திய மக்களின் வாழ்க்கையை சிதைக்க வேண்டுமா?
நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "புதிதாக ஒரு சட்டம் இயற்றும்போது, அதைப்பற்றி நூறு முறை யோசித்துப் பார்க்க வேண்டும்'' என்று இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு முறை குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
மத்திய அரசுக்கு நான் சொல்ல விரும்புவது இது மட்டும்தான்!
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றால், அது எங்களுடைய கருத்துகள் மட்டுமல்ல; இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடியின் கருத்தும் அதுதான்.
நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி சர்வதேச சூரியசக்தி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்றார்கள்.
அப்போது, “இன்றைக்கு எண்ணெய் கிணறுகள் ஆற்றிவரும் பங்கைப்போல, எதிர்காலத்தில் சூரிய ஒளிக்கற்றைகளும் பங்காற்றும்” என்று பேசியவர் வேறு யாருமல்ல; நமது பிரதமர் மோடி அவர்கள் தான்.
அதைத்தான் நாங்களும் சொல்லிவருகிறோம். ஆனால் மத்திய - மாநில அரசுகள் இதில் நாடகம் ஆடுகின்றன.
ஜூலை மாதம் 16ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி ஒரு கேள்வி எழுப்பினார்.
அப்போது பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், 'தமிழகத்தில் மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தான் செயல்படுத்தப்படுகிறது' என்று பதில் சொல்லியிருக்கின்றார்.
இதைத் தொடார்ந்து தமிழக சட்டமன்றத்தில் மறுநாளே நான் கேள்வி எழுப்பினேன்.
தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் அதற்கு பதில் அளிக்கும்போது, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி தரவில்லை; தரமாட்டோம். எந்த நிறுவனத்துக்கும் அனுமதி தரவில்லை' என்று அழுத்தம் திருத்தமாக - திட்டவட்டமாக சொன்னார்.
நான் கேட்கிறேன், மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்கிறது. மாநில அரசு செயல்படுத்த அனுமதி தரமாட்டோம் என்று சொல்கிறது.
யார் சொல்வது உண்மை? - யார் சொல்வது பொய்?
இரண்டு பேருமே மக்களை ஏமாற்றுகிறார்கள். அதுதான் முழுமையான உண்மை. அதுதான் இன்றைக்கு நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.
புதுவையில் பார்க்கின்றோம், அங்கிருக்கும் முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் முதுகெலும்புள்ள முதலமைச்சராக இருக்கிறார்.
இதுபோன்ற அறிக்கை வந்தபோது, உடனடியாக நிராகரித்து திருப்பி அனுப்புகின்ற ஆற்றல் அவருக்கு இருந்தது. அது ஏன் இங்கு இருக்கும் இந்த ஆட்சிக்கு இல்லை. இதைத்தான் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழக அரசு ஏன் இந்த கோரிக்கைகளை திருப்பி அனுப்பவில்லை?
“ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று ஒரு கொள்கை முடிவு எடுத்து - அதை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் தாக்கீது அனுப்புங்கள் என்று நான் சட்டமன்றத்தில் கேட்டேன். ஆனால், அதையும் இன்றைக்கு இந்த அரசு செய்திருக்கிறதா என்றால், செய்யவில்லை.
எனவே, இந்த திட்டங்களை எல்லாம் கைவிட்டு காவிரி டெல்டாவை பாதுகாக்க வேண்டும் என்றால், “பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக” மாற்ற வேண்டும் என்று நாம் இப்போது இந்த கருத்தரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்றினால் மட்டும் தான் காவிரி டெல்டாவை காப்பாற்ற முடியும்; தமிழகத்தையும் காப்பாற்ற முடியும்!
கடந்த எட்டு ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. கர்நாடகாவில் இப்போது மழை பெய்வது கொண்டிருக்கும் காரணத்தினால், உபரி நீர் இங்கு வருகிறது.
தண்ணீர் இல்லாத காலத்தில் தூர்வாரி இருக்க வேண்டும். அதையும் முறையாக செய்யவில்லை.
மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு மொத்தமாக தடுப்பணை போட்டு தடுக்கவும் இந்த மாநில அரசால் முடியவில்லை.
அது காவிரிப் பிரச்னையாக இருந்தாலும்,
அணை பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும், நதிநீர் தீர்ப்பாயமாக இருந்தாலும், இவை அனைத்தும் தமிழக மக்களை வஞ்சிக்கும் - மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளாக நடந்துகொண்டிருக்கிறது.
எனவே, இவைகளையெல்லாம் நாம் தடுத்தாக வேண்டும். இப்பிரச்னைகளை நாம் அரசியல்ரீதியாக பார்க்கவில்லை;
நம்முடைய எதிர்காலமாக பார்க்கிறோம்.
ஆனால், உழுதுண்டு வாழ்பவர் வாழ்க்கையே பழுதுண்டு போய்க்கிடக்கிறது. பழுதுண்டு கிடக்கும் வாழ்க்கையை சரிசெய்யவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
நேற்றுக்கூட ஒரு செய்தியை நாம் படித்தோம். ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வாங்கியிருக்கிறது என்ற ஒரு செய்தி வந்திருக்கிறது.
கருத்தரங்கம் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது - மத்திய அரசிற்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால், ரிசர்வ் வங்கியிலிருந்து நீங்கள் பெற்றிருக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுங்கள்.
இந்த கோரிக்கையைத்தான் நான் இந்த கருத்தரங்க நிகழ்ச்சியின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இக்கருத்தரங்கில் ஒலித்த குரல்கள் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கும். சட்டமன்றத்திலும் தொடர்ந்து நாங்கள் ஒலிப்போம்.
எனவே, சட்டமன்றத்திற்கு இந்த பிரச்சினையைக் கொண்டு செல்வோம்.
வேளாண்மையைக் காப்போம்!
விவசாயிகளைக் காப்போம்!!
காவிரியைக் காப்போம்!!!
தமிழகம் காப்போம்!!!!
விடைபெறுகிறேன்." என தெரிவித்தார்.