அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற நாளில் அவரது தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் கடுமையான மோதல் நடந்தது. அந்த மோதலில் பலருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனால் அதிமுக தொண்டர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர். மேலும் இருவருக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியால் கட்சிதான் அழிகிறது என ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து திமுக எம்.பி., டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்-அமைச்சராக இருந்தபோது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, "இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது" என்று வசனம் பேசியிருக்கிறார்.
தங்களுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ்டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட, 'ரத்தத்தின் ரத்தங்கள்' நாங்கள் என்று ஊரறிய-உலகமறிய சம்பவம் நிகழ்த்தினார்கள். அதன்பிறகு, இடைக்காலத் தலைமைப் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, தன் திடீர் அதிகாரத்தால் பன்னீர்செல்வத்தை நீக்கினார். தலைமை அலுவலகத்தில் இருந்த பன்னீர்செல்வம் பழனிசாமியை நீக்கினார். கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் இந்தத் தெருச்சண்டையை மறைக்க, தி.மு.க மீது பாய்கிறார் பழனிசாமி.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் தி.மு.க. திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்று வாய்ச்சவடால் அடிக்கும் பழனிசாமி என்ன நிர்வாகத்தை நடத்தினார் என்றே தெரியவில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வதுதான் கழக ஆட்சி.
உங்களைப் போல மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஆட்சியல்ல. உலகப் புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அண்ணாவின் பெயரைக் கட்சியின் லேபிளாக வைத்துக்கொண்டு சிதைக்கின்ற ஆட்சியல்ல எங்கள் தி.மு.கழக ஆட்சி.
தி.மு.கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், சர்வதேச தரத்திலான சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி வைத்தாரே அப்போது இந்தப் பழனிசாமி எங்கே போயிருந்தார்? அ.தி.மு.க. ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய ஒன்றிய பா.ஜ.க அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக தி.மு.க.வைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | திமுகவின் பக்கம் எல்லாவற்றையும் திருப்புகிறாரா எடப்பாடி பழனிச்சாமி ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ