சட்ட விரோதமாக பேனர் வைப்பதை தடுக்க மாநில அரசிடம் எந்த திட்டமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறை படுத்த தவறியதாக தமிழக தலைமை செயலாளர் மீது டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்று பேனர் வைத்த விவகாரம் குறித்து தலைமை செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.
அப்போது, தலைமை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சட்டத்திற்கு உட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பேனர் வைக்கப்படுவதை தடுக்க வேண்டியது மாநகராட்சி ஊழியர்களின் கடமை எனவும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், இந்த பேனர்கள் வைக்கும் போது அதிகாரிகள் எங்கே சென்றனர் எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு மீதும், நீதி பரிபாலன முறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுப்பதாக தலைமை செயலாளர் கூறிவரும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.
சட்டவிரோத பேனர் வைத்த அரசியல் கட்சியினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசியல் கட்சிகளை இந்த வழக்கில் இணைத்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.