‘டீ சாப்பிட தனியா நூறு தரணும்’ - நெல்கொள்முதல் நிலையத்தில் தொடரும் லஞ்சம்

நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 27, 2022, 09:48 AM IST
  • முறையாக செயல்படுகிறதா அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் ?
  • மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்
  • நாகை பிரதாபராமாபுரம் கொள்முதல் நிலையத்தில் சிக்கிய அதிகாரிகள்
‘டீ சாப்பிட தனியா நூறு தரணும்’ - நெல்கொள்முதல் நிலையத்தில் தொடரும் லஞ்சம்  title=

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை விவசாயிகளுக்கு லாபகரமாக இருப்பதால் தங்களது நெல் மூட்டைகளை விவசாயிகள் இங்கேயே விற்று வருகின்றனர். இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனது கொள்முதலை மேற்கொள்கிறது. 100 மெட்ரிக் டன் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், பதர் தூற்றும் இயந்திரம், மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பத மானி ஆகியவற்றோடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில்தான் இருக்கின்றன.

மேலும் படிக்க | விவசாயிகள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பர் வசதி

ஒவ்வொரு பருவத்தின் தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. அதாவது, குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் கொள்முதல் செய்யப்படும். சம்பா சாகுபடியில் அறுவடையாகும் நெல் ஜனவரி-மார்ச் மாதங்களில் கொள்முதல் செய்யப்படும். நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு முறையாக இருந்தாலும் அதில் பணிபுரியும் ஊழியர்களால் விவசாயிகள் நொந்துபோய் உள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு வாங்கப்படும் லஞ்சங்களால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். குறைந்த அளவே நெல்மூட்டைநிலையங்கள் இருப்பதால், மூட்டைகளை தேக்கிவைக்க முடியாது. இதனால், வேறுவழியில்லாமல் மூட்டை ஒன்று அதிகாரிகள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேபோல், அதிகாரிகள் தரப்பிலும் சில வாதங்கள் வைக்கப்படுகிறது. அரசு தங்களுக்கு முறையான ஊதியம் தரவில்லை என்றும், ஊதிய உயர்வு இல்லாத நிலை இருந்து வருவதாகவும் அவர்களின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. இருதரப்பு வாதங்களில் நாள்தோறும் பாதிக்கப்படுவது கடும் உழைப்பில் நெல்லைக் கொண்டு வரும் விவசாயிதான்.! 

மேலும் படிக்க | வேளாண்மை என்பது தொழில் மட்டுமல்ல; அது வாழ்க்கை, பண்பாடு.! - மு.க.ஸ்டாலின்

ஊகங்களின் அடிப்படையில் நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் மீது இதுவரை புகார் தெரிவித்து வந்த நிலையில், நாகையில் பட்டியல் எழுத்தர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சம்பா சாகுபடி முடிந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமாபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோ என்பவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த எழுத்தர் பாஸ்கர், ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் என மொத்தம் ஆயிரத்து 940 ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், நெல்கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு டீ வாங்கி கொடுப்பதற்கு தனியாக 100 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுமாறும்  விவசாயியிடம் அவர் வற்புறுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News