மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக கட்சி குறித்த கேள்விகளுக்கும் கொடநாடு வழக்கு குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
“கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் நான் பேசிய போது ஸ்டாலின் என்னிடம் விவாதிக்க வேண்டியது தானே. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவ குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக ஆட்சியில், அது தொடர்பான வழக்கு நடைபெற்றது அதிமுக ஆட்சியில். ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக வழக்கறிஞர். இவர்களுக்கு ஜாமீன் தாரர்களாக இருந்தது திமுகவினர். கொலை குற்றவாளிக்கும், திமுகவை சேர்ந்த ஜாமீன் தாரருக்கும் என்ன சம்பந்தம்? கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாத காரணத்தாலேயே வழக்கு தாமதம் ஆனது. ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மீண்டும் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்படுவது ஏன்? கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
மேலும் படிக்க | டிடிவி, ஓபிஎஸ்க்கு குட்பை..! இபிஎஸ்-க்கு ஹலோ..! சசிகலாவின் மாஸ்டர் பிளான்!
காவிரி விவகாரம்..
காவிரி விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அந்த விவகாரத்தில் தமிழக மக்களின் குரலை அதிமுக நாடாளுமன்றத்தில் ஒலித்தது. ஆனால், திமுக குரல் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் இந்தியாவை காப்பாற்ற போகிறார்களாம்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கூரை ஏறி கோழி பிடிக்காதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக போகிறார்களாம். பெங்களூரில் இந்தியா கூட்டணி ஆலோசனையின் போது துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் காவிரி பிரச்சனையை பேசுவது தப்பா? பேச வேண்டியது தானே. அதற்கு தானே கூட்டணி” என்றார்.
“அதிமுக அடிமை கிடையாது…”
“அதிமுக எப்போதும் எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது” என்று பேசிய ஈ.பி.எஸ், “ திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே நோக்கம், மக்கள் நலன் அல்ல” என்றார். மேலும், “ஸ்டாலினுக்கு மக்களை, விவசாயிகளை பற்றி கவலையில்லை. டெல்டா காரன் என வசனம் பேசியவர், நெல் பயிர் எல்லாம் கருகிய பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை டெல்டாகாரன் என ஏற்றுக்கொள்வோம்” என்று காட்டமாக பேசினார்.
பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?
எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி அமைத்து அமைச்சரவை பெற்ற போது திமுகவுக்கு பாஜக இனித்தது, இப்போது கசக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, “கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றிய பாஜக அரசிடம் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்பவே கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், “நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து என் மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி என் மீது குற்றமில்லை என நிரூபித்தேன். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திமுவினரை போல ஐயோ நெஞ்சு வலிக்கிறது என போய் மருத்துவமனையில் படுக்கவில்லை” என்றார்.
“திமுக ஆட்சியில்தான் இவ்வளவு பிரச்சனை..”
நீட் விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி, “நீட் விவகாரத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சும் என திமுக மாறுபட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நீட் எனும் அரக்கனை கொண்டு வந்ததே திமுக ஆட்சி காலத்தில் தான். அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகளும்” என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ