தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றிருப்பதாற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கம் முதலே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நிலவி வரும் குளறுபடிகளின் உச்சமாக நிகழ்ந்திருக்கும் இத்தவறை பழனிசாமி அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவுகிறது. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துவதில் தொடக்கத்திலேயே ஆரம்பித்த குளறுபடிகள் , நேற்றைய இணையதள முடக்கம் வரை நீடித்து கொண்டிருக்கிறது. அதைப்போலவே எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையிலும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பழனிச்சாமி அரசு, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு மிகவும் தாமதமாக தமிழக ஒதுக்கீட்டுக்கான மருத்துவ தர வரிசைப்பட்டியலை இருதினங்களுக்கு முன் வெளியிட்டார்கள். அந்தப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் இடம் பெற்றிருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆந்திரா,கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்றது எப்படி?
ஏற்கனவே நீட் தேர்வால் கிராமப்புற மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவுகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. இந்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழக மாணவர்களின் வாய்ப்புகளையும் பறிக்கின்ற பழனிச்சாமி அரசின் இந்த பொறுப்பற்ற செயல் கடுமையான கண்டனத்திற்குரியது.
இதை எல்லாம் கவனிக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், தனது கட்சிக்கு ஆள் பிடிக்கிற வேலையில் மும்முரமாக இருக்கிறார். அரசும், அமைச்சரும் இப்படி இருக்கும் போது ‘நமக்கென்ன?’ என்று அதிகாரிகளும் தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, எந்தவித தாமதமும் இன்றி வெளி மாநில மாணவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தரவரிசைப் பட்டியலைப் புதிதாக வெளியிட வேண்டும். அதே போன்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களுக்கு அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.