கந்தன்சாவடியில் கட்டிடம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என தகவல்!
கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் அமைக்கும் பணிக்காக கட்டிடத்தின் பின்புறத்தில் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பணியில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். அதிக பாரம் தாங்காமல் சாரம் சரிந்து விழுந்ததில் 23 பேர் படுகாயத்துடன் வெவ்வேறு தனியா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் பப்லு என்ற 18 வயதுடைய பீகார் கட்டிடத்தொழிலாளி மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலத்த காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்த பணியிலும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சென்னை கந்தன்சாவடியில் கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்த பகுதியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்துவருகிறார்.