பணிப்பெண் கொடுமை... திமுக எம்எல்ஏ மகன் வழக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Pallavaram MLA's Son Case Update: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2024, 05:56 PM IST
  • குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர் - பாதிக்கப்பட்ட தரப்பு
  • பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைதாகியிருப்பார்கள்? - குற்றஞ்சாட்டப்பட்டோர்
  • இந்த வழக்கு பிப். 2ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணிப்பெண் கொடுமை... திமுக எம்எல்ஏ மகன் வழக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு! title=

Pallavaram MLA's Son Case Update In Tamil: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட ஆண்டோ மதிவாணன் மற்றும் மர்லினா ஆகிய இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பு வாதம்

இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதிட்டார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது: தேசிய பட்டியலின ஆணையம்

அவர் தனது வாதத்தில், பணிப்பெண்ணின் கல்வி செலவுக்க்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளதாக கூறினார். எம்எல்ஏ மகன் என்பதால் இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வாதம்

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா. மோகன், எஸ்.சி., எஸ்.டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அன்றே கூறினார். 

இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் எனவும் வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் இந்த பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கூறிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

போலீசார் தரப்பு வாதம்

இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவு தவறாக பயன்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார். காவல்துறை சார்பில் மாநகர சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். 

வழக்கில் இன்று தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்.2ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எஸ்.அல்லி இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். அந்த தீர்ப்பில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ். அல்லி  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தனியார் நிறுவனம் தோண்டிய 15 அடி குழி: 5 வீடுகளில் விரிசல், சுவர் இடிந்து விழுந்து விபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News