சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவன் இருக்கும் வார்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் நிலை தற்போது தேறி வருவதோடு மேலும் அவரது காயங்கள் குணமடைந்து விட்டது.
இன்னும் 2 நாட்களுக்கு அவனை மருத்துவமனையில் வைத்திருக்க போலீசாரும், டாக்டர்களும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு அவன் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும். தற்போது நேற்று அவன் மூன்று வேளை உணவையும் வழக்கம் போல் சாப்பிடிகிறான்.
போலீசார் மற்றும் டாக்டர்கள் என்ன கேட்டாலும் ராம்குமார் பதில் கூறுகிறான். ஆனால் அவன் தலையை குனிந்து கொண்டே பதில் சொல்கிறான். அவனது குரல் மெல்லியதாக உள்ளது. கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்பட்டதும் அவன் குரல் சத்தம் வேகமாக கேட்கும் என்று தெரிகிறது.
ராம்குமாரை சிறைசாலைக்கு மாற்றுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை போலீஸ் கண்காணிப்பாளர் நசீர் அகமது தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், கொலையாளி ராம்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமாரின் வக்கீல் கிருஷ்ண மூர்த்தி மனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மனுவில் சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம்சாட்டபட்டு தெரிவிக்கபட்டு உள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னரே சுவாதி தாக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.