மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை காலங்களில் வீசும் கிழக்கு திசைக்காற்று ஆகியவற்றின் காரணமாக இந்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 8 சென்டி மீட்டரும், ராமேஸ்வரத்தில் 7 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.