டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு!

முதலிலேயே ‘டிஸ்கிளைமர்’ மாதிரி இதைச் சொல்லிவிடுவது நல்லது என தோன்றுகிறது. நிச்சயமாக இது ‘குடி’க்கு ஆதரவான கட்டுரையல்ல என்பதுதான் அது.!   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 12, 2022, 06:44 PM IST
  • டாஸ்மாக்கால் வழங்கப்படும் மதுவின் தரம் என்ன ?
  • விஷத்துடன் ஒப்பிட்டு மதுப்பிரியர்கள் கவலை
  • லாபம் மட்டும்தான் மூலதனமா ?
டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு! title=

முதலிலேயே ‘டிஸ்கிளைமர்’ மாதிரி இதைச் சொல்லிவிடுவது நல்லது என தோன்றுகிறது. நிச்சயமாக இது ‘குடி’க்கு ஆதரவான கட்டுரையல்ல என்பதுதான் அது!. கடைக்குச் சென்று ஆயிரம் வாலா பட்டாசு சரம் ஒன்று வாங்குகிறீர்கள். அது நமத்துப் போய் வெடிக்காமல் போனால் என்ன செய்வீர்கள். ஒரு நுகர்வோராக நிச்சயம் உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்தானே. கடைக்காரரிடம் நிச்சயம் கேட்பீர்கள். இந்த அநியாயத்தை யாரிடமாவது சொன்னால், ‘இப்ப எதுக்கு உனக்கு பட்டாசு. இது தேவையா ?’ என்ற கேள்வி எவ்வளவு அபத்தமானதோ  அதேபோலத்தான், டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டில் மது வாங்கும் நுகர்வோர் ஒருவர், அதன் தரம் குறித்துக் கேள்வி கேட்கும்போது, ‘குடிக்குற உனக்கு இதெல்லாம் தேவையா?’ என்ற கேள்வியும், அவரை மதுவுக்கு ஆதரவானராக பார்ப்பதும் அல்லது குடிகாரராக அணுகுவதும்.!

மேலும் படிக்க | பார்களை மூடுங்கள் : உயர்நீதிமன்றம் காட்டம்!

குடி உடல்நலத்துக்கு கேடு, குடும்பத்துக்கு கேடு போன்ற சமாச்சாரங்கள் குடிக்கும் நபருக்கும் தெரியும், விற்கும் டாஸ்மாக் நிறுவனத்துக்கும் தெரியும், அரசுக்கும் தெரியும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், தமிழகத்தில் குடிப்பவர்களுக்கு மத்தியில் ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் குறித்துப் பேசுவது தனி ஏரியா. தமிழ்ச் சமூகத்துக்கு மது தேவையா, இல்லையா என்ற ஒழுக்க மதிப்பீடுகளுக்கும், விவாதத்திற்கும் நாம் செல்லவேண்டியதில்லை. நாம் மிக முக்கியமாக இங்கு பேச விரும்புவது, குடியை பணம் கொடுத்து வாங்கும் ஒரு நுகர்வோருக்கு இழைக்கப்படும் சுரண்டலை மட்டுமே. வெறும் கேளிக்கையாகவோ அல்லது எள்ளி நகையாடும் ஒரு பிரச்சனையாகவோ தமிழகத்தில் இந்தப் பிரச்சனை அணுகப்படுகிறது. இந்த அநீதியை நகைச்சுவைக்கான ஒரு மெயின்ஸ்ட்ரீம் மெட்டீரியலாக மாற்றிய பெரும் பங்கு மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கும் உண்டு. ‘குடிகாரனுக்கு உரிமை வேறு ஒரு கேடு’ என்று ஒழுக்கவாதிகள் சமூகத்தில் ஏற்றி வைத்திருக்கும் பொதுபிம்பம் முக்கிய காரணம். மதுவை அருந்தும் நபர்கள்கூட, இந்தப் பிரச்சனைப் பற்றி பேசினால் ‘குடிகாரர்’ என்ற அடையாளத்தில் சிக்கிவிடுவோமோ என்ற கலாச்சார அச்சமும் இன்னொரு காரணம். இதன் கடைசிமட்ட கள நிலவரத்துக்கு சென்றோமானால், இதன் வீரியம் புரியும். அதற்குமுன், டாஸ்மாக் நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்களைக் கொஞ்சம் கவனியுங்கள்.

மேலும் படிக்க | இரட்டை வேடம் போடும் திமுக : ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் 6,434 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. இதன்மூலம், கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ.37,000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு வருவாய் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. தனியார் மதுபான ஆலைகளில் இருந்து பெறப்படும் பல வகையான மதுபாட்டில்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் நிறுவனம் வாங்கி விற்பனை செய்கிறது. இந்த தனியார் மதுபான ஆலைகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் இரு திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களாக இருக்கிறார்கள். ஒரு நுகர்வோனின் பார்வையில் இருந்து பார்த்தால், தனியார் மதுபான ஆலைகளை யார் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால், அங்கிருந்து உருவாகி வரும் மதுவின் தரம் என்ன ? அரசுக்கு மதுபாட்டில்களை வழங்கும் ஆலைகளின் வியாபாரத்தில் குறைந்தபட்ச நேர்மையாவது உண்டா ? பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தால் விற்கப்படும் மதுவின் தரம் எந்த இடத்தில் இருக்கிறது ? இதற்குமுன்பு கிடைத்த நல்ல ப்ராண்ட் மதுவகைகள் இப்போது கிடைக்காமல் செய்ததற்கு பின்னுள்ள அரசியல் என்ன ? இதுபோன்ற பிராண்ட்களை ஓரம்கட்டிவிட்டு முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள தனியார் மது ஆலைகளின் பிராண்டுகளால் மட்டுமே டாஸ்மாக்கை நிரப்பியதற்கு பின்னால் உள்ள ஊழல் என்ன ? போன்ற பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க | மதுபானங்கள் விலை உயர்வு - குழம்பிப்போய் குமுறும் குடிமகன்கள்..!

இந்தியாவிலேயே மிக மோசமான மது கிடைப்பது தமிழ்நாட்டில்தான் என்ற நிலை இருந்துவருகிறது. எந்த பாட்டிலை பருகினாலும் ‘தலைவலி’ என்பது இயல்பாகிவிட்டதென்றால் ஒரு மதுப்பிரியர் அருந்துவது மதுவா ? அல்லது விஷமா ?!. நிச்சயாக தமிழக மக்கள் விஷத்தைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தப் பிரச்சனையை புரிந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் புலம்பித் தீர்க்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. 

இதுவரை ரூ.110-க்கு விற்கப்பட்ட குவாட்டர் மதுபாட்டில், தற்போது ரூ.120 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரகங்கள் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து ரூ.10ல் இருந்து ரூ.80 வரைக்கும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலமாக, தமிழக அரசுக்கு கூடுதலாக 15 சதவிகிதம் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இப்போது மீண்டும் யதார்த்தக் களத்துக்கு வருவோம்.  அடித்தள தொழிலாளி ஒருவர் டாஸ்மாக்கில் குடிக்க வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இருப்பதிலேயே படுமட்டமான ஒரு குவாட்டர் 120 ரூபாய், ஒரு க்ளாஸ், கொஞ்சம் தண்ணீர், ஒரு துண்டு மாங்காய் அல்லது பட்டாணி. 200 ரூபாய்க்குள் முடிந்தது கதை. 10 ரூபாயை கூடுதலாக கொடுப்பதில் அந்த நுகர்வோருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இதே அடுத்த லெவல் நுகர்வோரைக் கவனியுங்கள். இவர்தான் மிக முக்கியமானவர். 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலான பிராண்ட்-ஆன குவாட்டர் பாட்டிலை வாங்கி, அடுத்த லெவல் சைட் டிஷ்-ஐ நோக்கிச் செல்லும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நுகர்வோர் இவர்.  இந்த விலையுயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த நடுத்தரவர்க்க நுகர்வோர்கள்தான். இந்த இடத்தில் இருந்து ஒரு நூலைப் பிடித்து அடுத்தக்கட்டத்துக்கு தாவுவோம்.

இப்படி குடிப்பவர்கள் இதோடு நிறுத்திக்கொண்டால் சரி ; ஆனால், அங்குதான் பிரச்சனை. இந்தக் கட்டுரையின் ஆன்மாவும் இந்த இடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. ஒரு குவாட்டர் பாட்டில் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்காகவாவது ஒரு நுகர்வோருக்கு போதையைத் தர வேண்டாமா ? வெறும் ஒரு மணி நேரத்தில் மேலே குறிப்பிட்ட அந்த அடிமட்ட தொழிலாளி எப்படியாவது குடித்தே ஆக வேண்டும் என்று கடன்வாங்கியாவது அடுத்த குவாட்டர் நோக்கிச் செல்கிறார். அதற்குகடுத்த நடுத்தரவர்க்கம் மீண்டும் தனது பட்ஜெட்டில் கைவைத்து கூடுதல் பணம் செலவு செய்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகிறது. இதற்கு காரணம் என்ன ? விஷம்தான்.!

மேலும் படிக்க | டாஸ்மாக் நிர்வாகம் இனிக்கிறது; கிராம சபைத் தீர்மானம் கசக்கிறதா?- மக்கள் நீதி மய்யம் கேள்வி

மதுவின் தரம் ஒருபக்கம் என்றால், குறைந்தபட்சம் டாஸ்மாக் பார்களைக் கவனியுங்கள். ஹிட்லரின் வதை முகாம்களுக்கு நிகரானவை. நாற்றமும், எச்சிலும், சுவற்றின் கலரே தெரியாத அளவுக்கு ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்களும் என ஒரு மனநோய் விடுதியைப் போல டாஸ்மாக் பார்கள் காட்சியளிக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசுகள், டாஸ்மாக் நிர்வாகத்தை ஏன் தனியாருக்குக் கொடுக்க கூடாது என்ற மெல்லிய குரல்கள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. வெறும் லாபம் மட்டும்தான் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலதனமா ?. இது பணம் கொடுத்து வாங்கும் ஒரு நுகர்வோரை ஏமாற்றும் செயல் இல்லையா.? அப்பட்டமான மோசடி இல்லையா ?. தமிழ்நாட்டில் நல்ல பிரியாணி கிடைக்கிறது ; நல்ல காஃபி கிடைக்கிறது ; அதைப்போல, கொடுக்கும் பணத்துக்கு நல்ல மதுவை எதிர்பார்ப்பது ஒரு நுகர்வோருக்கு உரிமையில்லையா ?. ‘குடிக்கிற ஆள்தானே. எதை வேண்டுமானாலும் கொடுப்போம். குடித்துச் சாகுங்கள்’ என்ற அரசின் எதேச்சதிகார மனோபாவம்தானே இது!. டாஸ்மாக் நிறுவனத்தால் வழங்கப்படும் தரம்குறைந்த மதுவைக் குடிக்க நிர்பந்திக்கப்படும் இந்தப் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேச தமிழக அரசு முன்வர வேண்டும். கொடுக்கும் பணத்துக்கு தரமான பொருள் கிடைக்கவேண்டும் இல்லையா.? அது மஞ்சள்தூளாக இருந்தாலும் சரி.! மதுவாக இருந்தாலும் சரி.! அதில் என்ன வேறுபாடு. சுரண்டல் எங்கு நடந்தாலும் அதன் பெயர் ‘சுரண்டல்’ தானே.!  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News