Karti Chidambaram News Latest : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் உருவெடுத்துள்ளது. கார்த்தி சிதம்பரம் திமுக கூட்டணியை விமர்சனம் செய்ததாக நினைத்து அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதுக்கோட்டையில் பேசிய முழு வீடியோவையும் பதிவிட்டு பதில் அளித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
என்ன பிரச்சனை?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை, இனி கூட்டணியை எதிர்பார்த்து காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் ஆண்ட கட்சி என்பதால் அந்த இடத்துக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியை கொண்டு செல்ல அனைவரும் உழைக்க வேண்டும் என அண்மையில் பேசியிருந்தார். அவருடைய பேச்சை வழிமொழியும் வகையில் கார்த்தி சிதம்பரமும் தான் பங்கேற்ற கூட்டங்களில் பேசினார். அவர் பேசும்போது, கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எந்த பிரச்சனையையும் நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கக்கூடாது, அரசு செய்யும் தவறுகளை மக்கள் பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி கட்டாயம் பேச வேண்டும் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு செல்வாக்கு இருக்கிறது, அதனை இன்னும் வலிமைப்படுத்த வேண்டும், இளைஞர்களின் நம்பிக்கையை பெற்று காங்கிரஸ் கட்சிக்குள் அவர்களை கொண்டு வரவேண்டும் என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார்.
மேலும் படிக்க | காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை - அமைச்சர் ஐ பெரியசாமி!
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். கார்த்தி சிதம்பரம் குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, "திமுக கூட்டணி இல்லையென்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட்கூட வாங்கியிருக்க முடியாது. இப்போது தேர்தலில் ஜெயித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது எம்பியாகிவிட்டார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் ஜெயிக்க வேண்டாமா?. அதனையெல்லாம் மனதில் வைத்து பேச வேண்டும். தேர்தலுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் இப்படி பேச வேண்டியது தானே?. அவருடைய பேச்சு தமிழ்நாடு காங்கிரஸூக்கு துரோகம்செய்கிற வகையில் இருக்கிறது. திமுக கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வென்றிருக்காது" என விமர்சித்தார்.
கார்த்தி சிதம்பரம் பதில்
இதற்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் பேசிய வீடியோவை பதிவிட்டிருக்கும் அவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் கார்த்தி சிதம்பரம், " கூட்டணி கட்சியின் தயவினால் தான் நான் உட்பட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றோம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. தமிழ்நாடு அரசு, முதலைமச்சரின் சிறப்பான திட்டங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதேநேரத்தில் கூட்டணியில் இருப்பதால் மக்கள் பிரச்சனையை பேசாமல் இருக்கும்போது, மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.
இன்று காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இருக்கிறது. இதற்கு காரணம் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் விலகி இருப்பது தான் காரணம். காங்கிரஸ் கட்சியை நோக்கி இளைஞர்களை புதியவர்களை வர வைக்க வேண்டும். அதற்கான செயல்களை தலைமை செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் எதார்த்த அரசியல் களத்தில் இருக்காது" என பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | அரசுப் பேருந்தை வழிமறித்து துரத்திய காட்டு யானை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ