R.M. Veerappan: திராவிட இயக்க மூத்த தலைவர் ஆர்.எம் வீரப்பன் காலமானார்!

RM Veerappan Death : முன்னாள் அமைச்சரும் திராவிட மூத்த தலைவருமான ஆர்.எம் வீரப்பன் காலமானார்.

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2024, 03:53 PM IST
  • திராவிட கட்சியின் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மரணம்
  • இவருக்கு வயது 97
  • வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்
R.M. Veerappan: திராவிட இயக்க மூத்த தலைவர் ஆர்.எம் வீரப்பன் காலமானார்! title=

RM Veerappan Death : முன்னாள் அமைச்சரும் திராவிட மூத்த தலைவருமான ஆர்.எம் வீரப்பன் காலமானார்.கே.ஆர்.ஆர். நாடகக் கம்பெனியில் கணக்கு பிள்ளையாக பணியாற்றி, பின்னர் எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, எம்.ஜி.ஆர் பிக்கர்ஸ் மேலாளராகி, சத்யா மூவீஸ் என்ற பட நிறுவன அதிபராகி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் இவர். 

காலமானார்:

சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு, வயது 97. இவருக்கு கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு, இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவை பலனளிக்காமல் தற்போது உயிரிழந்திருக்கிறார். 

RMV

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றியவர்:

ஆர்.எம்.வீரப்பனை, திரையுலகினரும் அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்களும், ‘ஆர்.எம்.வீ’ என அழைப்பர். இவர், புதுக்கோட்டை மாவட்டம், வல்லதிராக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் 1953ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை தொடங்கினார். இந்த நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர், ஆர்.எம்.வீரப்பன். இதையடுத்து 1963ஆம் ஆண்டில்  சத்யா மூவீஸ் திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார். 

அரசியலில் ஆர்.எம்.வி:

அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவராக இருந்தவர், ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜிஆர், அதிமுக கட்சியை தனியாக தொடங்கிய போது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுள், இவர் முக்கியமான இடத்தை பிடித்தவர். 1984ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தேர்தல் பிரச்சாரங்களில் அவரால் ஈடுபட முடியாமல் போனது. அப்போது, ஆர்.எம்.வீரப்பன்தான் தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

மேலும் படிக்க | பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்! திண்டுக்கலில் பாஜக பிரமுகர் தலைமறைவு!

அதிமுகவில் துணை பொதுச்செயலாளர்:

எம்.ஜி.ஆர் உயிரிழந்த பிறகு, அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட்டது. அப்போது, அக்கட்சியின் அதிகப்படியான எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என் ஜானகி முதலமைச்சரானார். அவரை முதலமைச்சர் ஆக்குவதில் ஆர்.எம் வீரப்பனுக்கும் பங்கு அதிகமானதாகும். இதையடுத்து அதிமுகவின் பிளவு நீங்கி ஒன்று பட்டது. அப்போது ஜெயலலிதாவால் அக்கட்சியின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். 

ஏற்றிருந்த பதவிகள்:

ஆர்.எம்.வீரப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், உள்ளாட்சி துரை அமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சராகவும் பதவிகளை ஏற்றிருக்கிறார். 

அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்தவர்..

ஆர்.எம்.வீரப்பன், தான் எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை முன்னதாகவே தேர்வு செய்து வைத்திருக்கிறார். அதன்படி, அவர் கூறிய இடத்தில்தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் அவர், தன் வாழ்க்கையில் அந்தி வேளைக்கு வந்து விட்டதாகவும், தனது குடும்பத்தினர் யாரையும் கடனாளியாக்க விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். உழைத்துக்கொண்டே வாழ வேண்டும் என எண்ணிய அவர், தற்போது உயிர் நீத்திருக்கும் செய்தி அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News