ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்விற்காக நேற்றைய முன் தினம் அழகர்கோவிலில் இருந்து சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார். பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.
#WATCH | Tamil Nadu: A huge crowd of devotees witness the entry of Lord Kallazhagar into the Vaigai River, for the unity & amity of the Saiva-Vaishnava, as part of the #MaduraiChithiraiFestival2022 festival, in Madurai pic.twitter.com/9zDL92LaOD
— ANI (@ANI) April 16, 2022
இந்த நிலையில் இந்த நிகழ்வை காண பல்லாயிர கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 20பேர் மூச்சுதிணறல் மற்றும் காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்கள் குறித்த தகவல்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உயிரிழந்த நபர்கள் குறித்த தகவலை அளிப்பதற்காக : மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 9498042434 என்ற உதவி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விழாவிற்கு கலந்துகொண்டு வீடு திரும்பாதவர்கள் இருந்தாலும் இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் உடலை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர் தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை உள்ளவர்களை நேரில் சிந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.