நான் முதல்வன் திட்டம் எதற்காக?... மாணவர்களுக்கு விளக்கிய முதலமைச்சர்

நான் முதல்வன் என்ற திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 25, 2022, 03:36 PM IST
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
  • இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
நான் முதல்வன் திட்டம் எதற்காக?... மாணவர்களுக்கு விளக்கிய முதலமைச்சர் title=

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு படித்தவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும், கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சி ஒரு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பெறக்கூடிய நிலையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். கள்ளம் கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கும் இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தைத் தருகிறது.

 MK Stalin

இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடவில்லை. உங்களையெல்லாம் என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அரசு அதிகாரிகள்கூட இதனை ‘வழிகாட்டும் நிகழ்ச்சி’ என்று சொன்னார்கள். நம்மை விட, இந்தக் காலத்துப் பிள்ளைகள் மிக மிக விவரமானவர்கள். நான் சொல்வது உண்மைதானே... அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே. எனவே உங்களுக்கு எல்லாமே தெரியும். ஏனென்றால், எல்லோர் கையிலும் இப்போது மொபைல் போன் வந்துவிட்டது. இல்லை… இல்லை… உலகமே உங்கள் விரல்நுனிக்கு இப்போது வந்துவிட்டது.

மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையத்தைப் பார்த்து அறிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும், உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன இதையெல்லாம் எடுத்துக் கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான், இந்த நிகழ்ச்சி. நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய நிகழ்ச்சியாகவும்தான் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

 MK Stalin

நீங்கள் உங்கள் வாழ்க்கையில், பள்ளிக் கல்வி என்ற ஒரு படியைத் தாண்டி, கல்லூரிக் கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவுச் சொத்துக்கள். உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான், ‘நான் முதல்வன்’ என்கிற இந்தத் திட்டம். அதன் ஓர் அங்கமாகத்தான் இந்த ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம் - கல்லூரியில் சேர்ந்தோம் - பட்டம் வாங்கினோம் - வேலையில் சேர்ந்தோம் -கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை.

எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம். இதுதான், 'நான் முதல்வன்' திட்டத்தின் உண்மையான நோக்கம்.

 MK Stalin

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன் - மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் - மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் - என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல கல்வித் திறனில் முதல்வன். அறிவாற்றலில் முதல்வன். படைப்புத் திறனில் முதல்வன். பன்முக ஆற்றலில் முதல்வன். ஒருவரை மதிக்கத் தெரிந்தவன். சமத்துவமாக நடக்கத் தெரிந்தவன்.

அனைவரும் பின்பற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்டவன். அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் பெற்றவன் என்று தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவர்களை உயர்த்தும் திட்டம்தான் இந்த நான் முதல்வன் என்கிற திட்டம். அந்த இலக்கை அடையவே இந்தக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கும் ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி

அரசுப் பள்ளியில் படித்து, பல துறைகளில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாகியவர்கள் பெயரை, என்னால் இங்கு பட்டியலிட முடியும். அரசுப் பள்ளியில் படித்து, ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை விநியோகம் செய்தவர், இந்த நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்களுள் ஒருவராக உருவானவர் தான் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்த, ஏவுகணைத் தொழில்நுட்பம் முதல், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் உட்பட பலவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்டு, இறுதியாக மக்கள் குடியரசுத் தலைவர் என்று போற்றப்பட்ட, அப்துல் கலாம் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.

சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அரசுப் பள்ளியில் படித்தவர்; இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் அரசுப் பள்ளியில் படித்தவர். ஏன்! இந்த மேடையை அமர்ந்திருக்கக்கூடிய, வரவேற்புரை ஆற்றிய நம்முடைய தலைமைச் செயலாளர் அரசுப் பள்ளியில் படித்தவர். காவல்துறை தலைமை இயக்குநர் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.

மேலும் படிக்க | முடிந்தது டெல்லி மீட்டிங் - ஆதரவை மீட்க சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ்

அரசுப் பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, அவரவர் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதற்கு, நம் கண்முன்னாலேயே மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கிறார்கள்.

அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான வாசற்படிதான் சமூகநீதி! அந்தச் சமூகநீதியை, இடஒதுக்கீட்டு உரிமையை சட்டமாக்கி வித்திட்டது.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்களில், தமிழ்நாட்டுக்கு இணையான கல்விக் கொள்கை எந்த மாநிலத்திலும் இல்லையென்றே சொல்லலாம். இதனை இன்னும் செம்மைப்படுத்தி, கல்வியில் சிறந்த தமிழ்நாடாக ஆக்குவதற்காகத் தீட்டப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன் திட்டம்’. அந்தத் திட்டத்தின்படிதான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News