மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் ஜல்லிக்கட்டு- மு.க.ஸ்டாலின்

-

Last Updated : Jan 25, 2017, 02:33 PM IST
மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் ஜல்லிக்கட்டு- மு.க.ஸ்டாலின் title=

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சி மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித் தது. ஒட்டு மொத்தத் தமிழகமும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. அங்கே சாதி அரசியலுக்கு சமாதி கட்டப்பட்டது! மதவேறுபாடு  மாண்டது! எந்தவித பேதமுமின்றி, நான் தமிழன்டா... நான் தமிழச்சிடா... எனும் தமிழினப் பற்று ஒன்று மட்டுமே மேலோங்கி இருந்தது!

இதுபோன்ற உணர்வுகள் எப்போதும் வெளிப்படுவதில்லை! திடீரென வெடிக்கும் எரிமலை போல வெடித்துக் கிளம்பும் இந்த உணர்வுகள் பின்னர் அடங்கி விடுகின்றன. அடுப்பில் கொதிக்கும் உலையை அடக்கத் தண்ணீர் தெளிப்பது போல சில தீர்வுகள் இந்த உணர்வை அமைதிப்படுத்துகின்றன.

சுனாமிகளும், புயலும், பூகம்பமும் எப்போதும் ஏற்படுவதில்லை. தட்ப வெட்பங்களே அவைகளை உருவாக்குகின்றன. ஓரிரு நாட்கள் உலகை உருட்டி விட்டு அவைகள் சென்று விடுகின்றன. பின்னர் இயல்பு நிலை திரும்பி விடுகிறது. அதேபோன்று தான் மக்கள் எழுச்சியும்.

நடந்து முடிந்த இந்த அமைதி வழி அறப்போரின் முடிவில் சில விரும்பத்தகாத விளைவுகளை காவல்துறை ஏற்படுத்தியிருந்தாலும் அதனால் பல இளைஞர்கள்  ரத்தம் சிந்துமளவு  தடியடியால் தாக்கப் பட்டிருக்கும் நிகழ்வு, ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், வாகனங்களுக்கு காவலரே தீ வைக்கும் கொடுமைகள் எனப் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து விட்டன. 

இந்த செயல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல; தவறுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில் மக்களின் மகத்தான எழுச்சியின் விளைவால் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இந்தப் போராட்டம் பெற்ற வெற்றியாகும்.

எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், இவற்றை எல்லாம் கண்டு அசையாது இருந்த மத்திய - மாநில  அரசுகள் மக்கள் எழுச்சி கண்டு மருண்டு, இப்போது ஜல்லிக்கட்டு நடத்திட வழி வகுத்துள்ளன.  தமிழக அரசு அவசரச் சட்டமன்றக் கூட்டம்  கூட்டி ஜல்லிக்கட்டு நடைபெற சட்டம் கொண்டு வந்துள்ளது.

இப்போது அலங்காநல்லூர் உட்பட பல ஊர்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு  நடத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பாக அந்த நிகழ்ச்சிகளை நடத்திட ஆர்வமுடன் அந்தப் பகுதி மக்கள் காளைகளுக்குப் பயிற்சி-அலங்காரம் எனப் பல்வேறு பட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன.

இந்த நேரத்தில் ஒன்றினை எண்ணிப் பார்த்திட வேண்டுகிறோம். கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற பல ஊர்களில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன! ``என் சாதிக்காரன் காளையை வேறு சாதிக்காரனான நீ அடக்குவதா?’’ என்பது போன்று சில இடங்களில் சாதிச் சண்டைகள், அதனை ஒட்டி பல வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள் ளதை யாரும் மறுக்க முடி யாது!

இன்று ஜல்லிக்கட்டு நடத்திடும் உரிமையைப் பெற்றுத் தர நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உணர்வை நாமெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.அங்கே எல்லா சாதியினரும் நமது தமிழ்ப் பாரம்பரியம் காத்திட  அண்ணன், தம்பிகளாக, அக்காள் - தங்கைகளாக ஒன்றிணைந்து, போராடி தான் இந்த உரிமையைப் பெற்றுத் தந்துள்ளார்கள்! நீ தாழ்ந்த சாதிக்காரன் - நான் உயர் சாதிக்காரன் என்று அங்கே பாகுபாடினைக் காண முடியவில்லை! எல்லோரும் தமிழ்ச் சாதி யினராகவே ஒன்று திரண் டிருந்தனர்.

இனி ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் எல்லாம் அதே போன்ற உணர்வு பளிச்சிட வேண்டும். சாதி வேற்றுமை மறந்து எல்லோரும் ஒன்றுகூடி தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்று அதனை சமத்துவ ஜல்லிக்கட்டாக ஆக்கிட வேண்டும்.

சாதி - மத பேதமின்றி ஊன் உறக்கம் மறந்து ஒன்று கூடிப் போராடி தடியடிகளைத் தாங்கி, ரத்தம் சிந்தி, ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தொடர்ந்திடப் போராடிய மக்களுக்கு -  இந்த சமத்துவ ஜல்லிகட்டு நிகழ்ச்சியே மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்! 

இவ்வாறு எழுதி உள்ளார்.

Trending News