மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. சிலர் தங்கள் வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து செல்கிறார்கள். சிலர் பலரது வாழ்க்கையை தொட்டுச் செல்கிறார்கள். சிலர் பாதி வழியிலேயே விட்டுச் செல்கிறார்கள்.
சிலர் மட்டுமே, உடலால் உலகை விட்டுச் சென்றாலும், உணர்வாய் அனைவரது இதயங்களோடும் இணைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் (S P Balasubrahmanyam) ஒருவர்.
தன் குரலால் நம் அனைவரையும் ஆனந்தப்படுத்திய அந்த இசை நாயகனுக்கு ஒரு இசை அஞ்சலி அளிக்கப்பட்டுள்ளது. பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான சோனி மியூசிக் ‘இசை அஞ்சலி’ என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையில் ‘டூயட்’ என்னும் படத்தில் SPB-யின் குரலில் வெளிவந்த ‘அஞ்சலி அஞ்சலி’ பாடலின் வரிகளை மாற்றி, SPB-க்கு இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichandran), ஹரிசரண், உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். மதன் கார்கி இப்பாடலை எழுதியுள்ளார்.
இப்பாடலை எடுத்துள்ள விதமும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. சமுதாயத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைத்து பிரிவுகளை, மரபுகளை சேர்ந்த மக்களும் ஒன்றுகூடி மகிழும் ஒரு மையப்புள்ளியாக SPB-யின் இசை இதில் காட்டப்பட்டுள்ளது. இந்த பாடலைப் பார்க்கும்போது மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றாக ஆட்கொள்கின்றன. SPB-யின் நினைவு மகிழ வைத்தாலும், அவர் இப்போது இல்லை என்ற உண்மை கண்களின் ஓரம் ஈரத்தை உண்டுபண்ணத்தான் செய்கிறது.
ALSO READ: இசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு
உண்மைதான்!! ஜீவ சுகம் பெற ராக நதியினில் நம்மை நீந்த வைத்த ஜீவன் அப்படித்தான் வாழ்ந்தார். தன் பாடல்களால், தன் குரலால் அனைவரையும் ஒன்று சேர்த்தார். அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரே பாடி இருப்பது போல, உடலுக்குத் தானே மரணம், உணர்விற்கு இல்லையே!! தேகத்திற்குத் தானே மரணம், இசைக்கு இல்லையே!! நம் மனம் உள்ள வரை அவர் பாடல் அதில் இருக்கும் என்பதுதான் உண்மை.
குரலை ஆண்டவன் அனைவருக்கும் தான் கொடுத்துள்ளான். ஆனால், அவருக்கு மட்டும் குழலையே குரலாய் படைத்தானோ? கோடியில் அவர் குரல் கேட்டாலும் குதூகலம் பிறக்கிறது!!
பலர் பாடகர்களாய் இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள். ஆனால் பாலுவுக்கு மட்டும் ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. பாலுவின் பாடல், காதுகோளோடு நில்லாமல், அணுக்களையும் ஆராய்கிறது, மனதை மயக்குகிறது, இதயத்தை இதமாக்குகிறது.
தன் குரலால் நம்மை இசை நகரில் ராஜ பவனி அழைத்துச் சென்று, நம் மன உணர்வுகளுக்கு ஒரு உருவம் கொடுத்த உன்னத மனிதர் SPB.
ALSO READ: SPB-க்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
காதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB!!
நிலாவைப் பார்த்தாலும், மலரைப் பார்த்தாலும், குழலைப் பார்த்தாலும், குழல் ஊதும் கண்ணனைப் பார்த்தாலும், அந்தி மழையைப் பார்த்தாலும், மலையோரம் வீசும் காற்றை சுவாசித்தாலும்…. எதிலும், எப்போதும் SPB-யின் நினைவு வருவதை தடுக்க முடியாது.
காற்றிருக்கும் வரை இசை இருக்கும். இசை இருக்கும் வரை SPB-யின் குரல் நீங்காத ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR