எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
மேலும் வரும் 23-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உழவு இல்லையேல் உணவு இல்லை;
உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை;
உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை;
உழவை மீட்போம்! உலகை காப்போம்!நமது சின்னம் #விவசாயி
- #சீமான்#VoteForFarmers #VellaporaanVivasayi pic.twitter.com/pmqsR2KPWo
— சீமான் (@SeemanOfficial) March 19, 2019
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்த நிலையில், அவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் கூறியதாவது., ''மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும். இந்தத் தேர்தலில் நமக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது. (கடந்த தேர்தல்களில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.)
தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். வரும் 23-ஆம் தேதி, நாம் தமிழர் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்'' என தெரிவித்தார்.
வருகின்ற மார்ச்-24 அன்று, நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் நேரில் கலந்துரையாடவிருக்கிறேன். தேர்தல் களப்பணியை மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவெடுக்கவிருக்கிறோம்.
கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்!
- சீமான் pic.twitter.com/vHLwxufmhO— சீமான் (@SeemanOfficial) March 18, 2019
முன்னதாக, வருகின்ற மார்ச் 24-ஆம் நாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் சீமான் நேரில் கலந்துரையாட உள்ளதாகவும், தேர்தல் களப்பணியை மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவெடுக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார். மேலும் இந்த கலந்தாய்வில் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.