நாங்குநேரியில் கை தோல்வி; அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் வெற்றி

தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுமார் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 24, 2019, 02:52 PM IST
நாங்குநேரியில் கை தோல்வி; அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் வெற்றி

சென்னை: கடந்த 21 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இன்று இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று தாமதமாக எண்ணப்பட்டன. தற்போது இரண்டு தொகுதிக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. இதனைதொடர்ந்து நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டு தொகுதி வெற்றி மூலம் தமிழக சட்டபேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 21 ஆ தேதி நடைபெற்ற 51 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், 2 மக்களை தொகுதிக்கான தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஹரியானா மாநிலத்தில் யாரும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக களம் இறங்கினர். மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் கட்சி சார்பாக சா.ராஜநாராயணன் போட்டியிட்டார். காலை முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். ஆரம்பத்தில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தவர், அடுத்தடுத்து சுற்று முடிந்த நிலையில், படிப்படியாக முன்னேறி சுமார் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாங்குநேரி தொகுதியில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 94,565 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62,227 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சா.ராஜநாராயணன் 2660 வாக்குகள் பெற்றனர்.

அதேபோல புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

More Stories

Trending News