தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதால், மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற நோக்கத்தில், இன்று டெல்லியில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாக்கினார்.
தமிழக சார்பாக துணை முதல் அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். அதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது, தமிழ்நாட்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை பற்றி பேசினேன். வறட்சி காரணமாக குடிநீர் ஆதாரங்கள் பொய்த்துவரும் நிலையில், மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி, அதை ஒரு இயக்கம் போல செயல்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளித்து வரும் மத்திய அரசு, அதற்குரிய நிதியை, இந்த வருட வரவு செலவு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்ட திட்டத்துக்கு அனுமதி வழங்கி, வரும் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் சென்னை புறநகர் ரயில் சேவையை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.