சபாநாயகர் தனபால் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்போது வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. விவாதத்துக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
DMK President MK Stalin in Chennai, Tamil Nadu: AIADMK has not given importance to the issue of drinking water which is why water scarcity is prevailing. After we raised this issue, the government has acted on it. pic.twitter.com/3sjvjayRM7
— ANI (@ANI) June 28, 2019
இந்நிலையில் தமிழக சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30-ந் தேதி பிறப்பித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாளான இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கூட்டம் வரும் திங்கட்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கையில்.,
முந்தைய அரசியல் சூழலில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுத்த அவசியமில்லை என கருதுகிறோம். சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திரும்ப பெற்றது திமுக என தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காதது தான் எனவும் திமுக தலைவர் குற்றம்சாட்டினார்.
மேலும் சட்டமன்ற கூட்டம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பொறுத்து பின்னர் முடிவு செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இடைத்தேர்தலுக்கு முன் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக கடிதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.