விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை..!
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40% குறைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கம் தனியார் மருந்து ஆலைகளுக்கு ஆதரவான வனத்துறையின் செயல்பாடுகளை மூடி மறைக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 1998-ஆம் ஆண்டு அறிவிக்கை செய்யப்பட்டதாகும். அப்போது வேடந்தாங்கல் ஏரி அமைந்துள்ள 73 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. இப்போது 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் முதல் ஒரு கிலோமீட்டர் சுற்றளவை மையப் பகுதியாகவும், அடுத்த இரு கிலோமீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப் படுத்த முடிவு செய்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்.
சரணாலயங்களைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் பகுதிகள் (Eco Sensitive Areas- ESA) உருவாக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. வேடந்தாங்கலில் சுற்றுச்சூழல் பகுதி உருவாக்கப்பட வேண்டும் என்றால், அது ஏற்கனவே சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியில் தான் செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக வனத்துறையோ, இருக்கும் 5 கி.மீ சுற்றளவில் இந்த பகுதிகளை உருவாக்க முயல்கிறது. அதன்படி சரணாலயப் பகுதி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் சுருக்கப்பட்டு விடும். இது தான் உண்மை. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கிறது.
READ | 1.5 கோடி மதிப்பீட்டில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி திறப்பு...
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்படி சரணாலயத்தின் மையப்பகுதியில் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது. அதன்படி பார்த்தால், இப்போதுள்ள அமைப்பின்படி, சரணாலயம் அமைந்துள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் எந்த தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கோ, அதற்கு வெளியில் உள்ள ஆலைகளை சரணாலயப் பகுதிகளுக்குள் விரிவாக்கம் செய்யவோ அனுமதி கிடைக்காது. ஆனால், தமிழக வனத்துறை செய்ய உத்தேசித்துள்ள வகைப்படுத்துதலின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு மட்டும் தான் மையப் பகுதி என்பதால், அதற்கு வெளியில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க முடியும். அதற்காகத் தான் சரணாலயத்தின் நிலப்பரப்பை வகைப்படுத்தும் பணிகளை வனத்துறை தீவிரமாக மேற்கொள்கிறது.
இத்தகைய வகைப்பாடுகளை மேற்கொள்ளாவிட்டால், வேடந்தாங்கல் ஏரியிலிருந்து 5 கிமீ சுற்றளவு எல்லையில் இப்போது விவசாயிகள் மேற்கொண்டு வரும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற தகவலையும் வனத்துறை பரப்பி வருகிறது. இது பொய்யானது. வேடந்தாங்கல் சரணாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பே 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 28 கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். பறவைகள் சரணாலயப் பகுதிகளில் சொந்த நிலங்களில் மட்டுமின்றி, பொது நிலங்களிலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ள எந்தத் தடையும் கிடையாது. அதனால் உழவர்களுக்கு எந்த காலத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒட்டுமொத்த 5 கிலோ மீட்டர் சுற்றளவும் மையப் பகுதியாக இருந்து வருகிறது. அதனால் அந்த பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால், விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டு ஆம்கோ பேட்டரீஸ் ஆலை 2010-ஆம் ஆண்டிலும் ஆர்டைன் ஹெல்த்கேர் தொழிற்சாலை 2011&ஆம் ஆண்டிலும் திறக்கப்பட்டுள்ளன. சரணாலயப் பகுதிகளுக்குள் இந்த ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த விதிமீறலுக்கு துணை போனவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
READ | உங்கள் வீட்டில் பசு உள்ளதா..... மாதம் ₹.70,000 வரை சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு...
இந்த பகுதியில் செயல்பட்டு வரும் இன்னொரு மருந்து தொழிற்சாலை வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 1990-களின் தொடக்கத்தில் பிரதீப் டிரக் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டு, பின்னர் 2001-ல் சன் பார்மா நிறுவனத்தால் வாங்கப்பட்டது ஆகும். இப்போது அந்த ஆலையை பறவைகள் சரணாலயத்தின் உட்பகுதி வரை விரிவாக்க சன்பார்மா தீர்மானித்திருப்பதுடன், அதற்கான அனுமதி கோரி மத்திய வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறது.
தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்; இடைநிலைப் பகுதியை அமைப்பதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பகுதியை உருவாக்குவதாக இருந்தாலும் அது இப்போதுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் தான் செய்யப்பட வேண்டும். 5 கிலோ மீட்டர் சுற்றளவும் சரணாலயத்தை மையப்பகுதியாக நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதை பாதிக்கும் வகையிலான அனைத்து முடிவுகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும், அப்பகுதியில் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து சட்டப் போராட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் பா.ம.க. எடுக்கும்.